'பாரத்' என பெயர் வைத்தால் எல்லாம் மாறிவிடுமா? சீமான் கேள்வி
|‘பாரத்’ என பெயர் வைத்தால் எல்லாம் மாறிவிடுமா? சீமான் கேள்வி.
போரூர்,
சென்னையை அடுத்த போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் மாயோன் திருவிழா மற்றும் மூக்கையா தேவரின் 44-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி மலர் வணக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு மாயோன் பெருவிழாவை கொண்டாடி விட்டு மூக்கையா தேவர் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் நிருபர்களிடம் சீமான் கூறியதாவது:-
பாரத், சூரத் என எது வேண்டுமானாலும் பெயர் வைக்கலாம். உன்னுடைய நாட்டுக்கு நீ பெயர் வைக்கிறாய். அதில் நான் தலையிட விரும்பவில்லை. ஆனால் என் நாடு தமிழ்நாடு. 'பாரத்' என்ற பெயரை வைத்து விட்டால் எல்லாம் மாறி விடுமா?. ரூ.150 லட்சம் கோடி கடன் உள்ளது. அனைவருக்கும் கல்வி, பசி இல்லாத பாரதம், அனைவருக்கும் வேலைவாய்ப்பு என அனைத்தும் உருவாகிவிடுமா?. ஒரே நாடு என்றால் ஏன் காவிரி நீர் பெற்று தர முடியவில்லை. ராமேஸ்வரத்தில் தாமரை, சூரியன் நேரடியாக போட்டியிட்டால் எனது வேட்பாளரை திரும்ப பெறுவேன். அண்ணா பிறந்தநாளில் இஸ்லாமிய சிறை கைதிகளை விடுதலை செய்வதால் நெருக்கடியில் இருந்தால் தி.மு.க. போட்டியிடும் தொகுதிகளில் எனது வேட்பாளர்களை திரும்ப பெற்று ஆதரிக்கிறேன். காவிரி நதிநீரை பங்கிட்டு தரவில்லை என்றால் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசை கூட்டணியில் இருந்து வெளியேற்றுங்கள். நான் முழுமையாக ஆதரிக்கிறேன்.
சனாதனத்தை பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதில் தவறில்லை. அவருக்கு மிரட்டல் விடுத்த அயோத்தி சாமியாரின் தலையை வெட்டினால் நான் ரூ.100 கோடி தருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.