இரவு முழுவதும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுமா?- விமான பயணிகள் எதிர்பார்ப்பு
|இரவு முழுவதும் மெட்ரோ ரெயில்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விமான பயணிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
ஆலந்தூர்,
சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் தொடங்கப்பட்ட மெட்ரோ ரெயில் சேவைக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது சென்னை விமான நிலையம்- திருவொற்றியூர் விம்கோநகர், பரங்கிமலை-சென்ட்ரல் இடையே 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் 3 வழித்தடங்களில் 118.9 கி.மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு வேகமாக நடந்து வருகின்றன. கொரோனா நோய் தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததை தொடந்து சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை, விமான சேவை பழைய நிலைக்கு திரும்பி உள்ளது. இதனால் உள்நாட்டு விமான சேவை நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டு உள்ளன.
இதேபோல் சர்வதேச விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடுகள் இரவு 12 மணிக்கு பின்னர் அதிக அளவு உள்ளது. ஆனால் தற்போது மெட்ரோ ரெயில் சேவை காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மட்டுமே உள்ளது. எனவே சென்னை விமான நிலையத்தில் இருந்து கோயம்பேடு பஸ்நிலையம், எழும்பூர், சென்ட்ரல் ரெயில் நிலையங்களை இணைக்கும் வகையில் இரவு முழுவதும் மெட்ரோ ரெயில்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விமான பயணிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இதுகுறித்து விமான பயணி ஒருவர் கூறியதாவது:- இரவில் தாமதமாக விமானங்களில் வரும் பயணிகளுக்கு விமான நிலைய மெட்ரோ ரெயில் நிலையத்தால் எந்த பலனும் இல்லை. தற்போது உள்நாட்டு விமான சேவைகள் நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டு இருக்கின்றன. மேலும் இரவு 12 மணிக்குப் பிறகு அதிகமான சர்வதேச விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடுகள் உள்ளன. துபாய், தோஹா, ஷார்ஜா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய இடங்களில் இருந்து சென்னை வரும் பிற மாவட்ட பயணிகள் கோயம்பேடு, எழும்பூர்- சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு செல்ல அதிகம் விரும்புவார்கள்.
இரவில் மெட்ரோ ரெயில் சேவை இல்லாததால் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே இரவு முழுவதும் மெட்ரோ ரெயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறுஅவர் கூறினார். இது குறித்து விமான நிறுவன அதிகாரி ஒருவர் கூறும்போது, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு போக்குவரத்து கழகங்களால் இயக்கப்படும் பஸ்கள் விமான நிலையத்திற்குள் வந்தன. தனியார் ஆம்னி பஸ்களும் காத்திருக்கும். இது தற்போது இல்லை,"என்றார்.
இதுதொடர்பாக மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறும்போது, பராமரிப்பு பணி காரணமாக இரவு நேர மெட்ரோ ரெயில் சேவைகளை இயக்க முடியாது. மொத்தம் 52 மெட்ரோ ரெயில்கள் உள்ளன. தினமும் இரவு பராமரிப்பு பணி செய்ய எங்களுக்கு 4 மணிநேரம் மட்டுமே உள்ளது. ஏற்கனவே இந்த நேரம் போதுமானதாக இல்லை. உலகில் எங்கும் மெட்ரோ ரெயில்கள் இரவில் இயக்கப்படுவது இல்லை என்றார்.