< Back
மாநில செய்திகள்
கொப்பரை தேங்காய் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

கொப்பரை தேங்காய் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

தினத்தந்தி
|
5 March 2023 7:34 PM GMT

உரிய கொள்முதல் விலை இருந்தும் பயன் இல்லாமல் உள்ளதால், கொப்பரை தேங்காய் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என தென்னை விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

கொப்பரை தேங்காய்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெறுகிறது. மேலும், தேங்காயில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களும், எண்ணெய் மற்றும் பவுடர், பால் தயாரிக்கப்படுகிறது. இதனை தயாரிக்க கொப்பரை தேங்காய் பயன்படுத்தப்படுகிறது. தேங்காயை உரித்து, உடைத்து அதனை வெயிலில் காய வைத்து விற்கப்படுவது தான் கொப்பரை தேங்காய். இந்த கொப்பரை தேங்காய் புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 1,000 டன் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கான விற்பனை கூடம் வேளாண்மை துறை மூலம் அறந்தாங்கி அருகே ராஜேந்திரபுரம், ஆலங்குடி ஆகிய இடங்களில் உள்ளது.

இதில் விவசாயிகள் தங்களது உரிய சான்றுகளுடன் கொப்பரை தேங்காய்களை விற்பனை செய்யலாம். இதற்கான விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்கிறது. கடந்த ஆண்டு ஒரு கிலோ ரூ.105.90 காசாக இருந்தது. இந்த ஆண்டு ஒரு கிலோ ரூ.108.60 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வருகிற 1-ந் தேதி முதல் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் கொப்பரை தேங்காய்க்கு உரிய விலை இருந்தும் பயன் இல்லாமல் இருப்பதாக தென்னை விவசாயிகள் கூறுகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

களம் அமைத்து கொடுத்தால்...

தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டமைப்பின் மாநில செயலாளர் செல்லதுரை:- தமிழகத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையங்கள் புதுக்கோட்டை உள்பட மொத்தம் 21 மாவட்டங்களில் 42 இடங்களில் உள்ளன. இதில் விவசாயிகளிடம் இருந்து குறிப்பிட்ட அளவை நிர்ணயம் செய்து மத்திய அரசு கொள்முதல் செய்கிறது. இதற்கு குறைந்தபட்ச ஆதார விலையை தேசிய வேளாண்மை கூட்டுறவு மார்க்கெட்டிங் கூட்டமைப்பு சார்பில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த விலையின் அடிப்படையில் மாநில அரசால் நடத்தப்படும் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொப்பரை தேங்காய்களை பெற்று அதனை தனியாருக்கு விற்கின்றனர். அவர்கள் அதில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக எண்ணெய், பவுடர், பால் உள்ளிட்டவைகளை தயாரிக்கிறார்கள். இதில் உரிய கொள்முதல் விலை இருந்தாலும் கொப்பரை தேங்காய் உற்பத்தியை அதிகரிக்க போதுமான நடவடிக்கை இல்லை. தேங்காயை காய வைக்க களங்களை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்க அரசு தரப்பில் தொழிற்சாலைகள் நிறுவப்பட வேண்டும். ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்கலாம். தேங்காய் எண்ணெய் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கலாம். கடந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,100 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு அதன் அளவை 800 டன்னாக குறைத்துள்ளனர். இதனை அதிகப்படுத்த வேண்டும்.

கொள்முதல் நிலையம்

இந்திய விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் தனபதி:- கொப்பரை தேங்காயில் தென்னை விவசாயிகளுக்கு நல்ல லாபம் உள்ளது. கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையங்கள் ஆலங்குடி, அறந்தாங்கி ராஜேந்திரபுரத்தில் மட்டுமே உள்ளன. அந்த பகுதியில் தென்னை மரங்கள் அதிகமாக இருப்பதால் அங்கு இதனை அமைத்துள்ளனர். மாவட்டத்தின் தலைநகரமான புதுக்கோட்டையிலும் ஒரு கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து விவசாயிகள் கொப்பரை தேங்காய் உற்பத்தியை அதிகரிக்க வகை செய்ய வேண்டும். உடைக்கப்பட்ட தேங்காயை வெயிலில் காய வைப்பதற்காக சிமெண்டு தளம் போன்ற தளங்களை அமைத்து கொடுக்க வேண்டும்.

ஆண்டு முழுவதும் கொள்முதல்

தென்னை விவசாயி ஈஸ்வரன்:- கொப்பரை தேங்காயை அரசு ஆண்டு முழுவதும் கொள்முதல் செய்தால் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மட்டும் கொள்முதல் செய்யப்படுவதால் மற்ற நாட்களில் தனியார் வியாபாரிகளிடம் கொப்பரை தேங்காயை விற்க வேண்டி உள்ளது. அரசு நிர்ணயிக்கும் விலையை விட ரூ.30 வரை குறைத்து அவர்கள் கொள்முதல் செய்கின்றனர். இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் தான் ஏற்படுகிறது. இதேபோல் கொப்பரை தேங்காயை வியாபாரிகள் கொள்முதல் செய்து விவசாயிகள் பெயரில் அரசின் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து லாபம் பெறுகின்றனர். இதனை தவிர்க்க ஆண்டு முழுவதும் அரசு கொள்முதல் செய்ய வேண்டும். அப்போது விவசாயிகள் மேலும் பயன்பெற முடியும். வெளி மாநிலங்களில் உள்ள நிறுவனங்கள், வேளாண் உற்பத்தி நிறுவனங்களுக்கு இங்கிருந்து கொப்பரை தேங்காயை பாதுகாப்பாக அனுப்பி விவசாயிகள் பயன்பெற துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

வீணாகும் தேங்காய் தண்ணீரை பாக்கெட்டுகளில் அடைப்பது எப்படி?

பயிற்சி அளிக்க கோரிக்கை

தேங்காயை 2 ஆக உடைக்கும் போது அதில் உள்ள தண்ணீர் வீணாக தான் போகும். ஆனால் கோவையில் இது போன்று கொப்பரை தேங்காய் தயாரிப்பதற்காக தேங்காயை உடைக்கும் போது அதில் உள்ள தண்ணீரை சேமித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அதுபோல புதுக்கோட்டை மாவட்டத்திலும் ஏற்பாடு செய்ய விவசாயிகளுக்கு போதுமான பயிற்சி மற்றும் தேங்காய் தண்ணீரை வீணாகாமல், கெடாமல் அதனை பாட்டில் அல்லது பாக்கெட்டுகளில் அடைப்பது எப்படி? என்பது குறித்து அரசு அதிகாரிகள் பயிற்சி அளித்தால் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் கூறுகின்றனர்.

மேலும் செய்திகள்