ஐகோர்ட்டில் வழக்காடும் மொழியாக தமிழை கொண்டு வந்தால் நன்மை தருமா? வக்கீல்கள் கருத்து
|ஐகோர்ட்டில் வழக்காடும் மொழியாக தமிழை கொண்டு வரும் பட்சத்தில் அது நீதிபதிகளுக்கும், வக்கீல்களுக்கும், பொதுமக்களுக்கும் நன்மை தருமா?, பாதிப்பு வருமா? என்பது குறித்து கேட்டபோது வக்கீல்கள் தங்களது கருத்துகளை கூறியுள்ளனர்.
சாமானியனுக்கு தெரியாது
ஆங்கில வார்த்தைகள் இப்போது தமிழ்மொழியுடன் கலந்து அதிகம் உச்சரிக்கப்பட்டாலும், பல கடினமான ஆங்கில சொற்களுக்கு இன்றும் விளக்கம் தெரியாதவர்கள் பலர் உள்ளனர். அதுவும் சட்டம் தொடர்பான ஆங்கில சொற்களுக்கு கூடுதல் விளக்கம் தேவைப்படுகிறது. நீதி கேட்டு ஐகோர்ட்டுக்கும், சுப்ரீம் கோர்ட்டுக்கும் சாமானிய மனிதன் சென்றால், அங்கு நடைபெறும் வழக்கு விசாரணை குறித்து அவருக்கு எதுவும் தெரியாது.
தன் வக்கீலும், எதிர்தரப்பு வக்கீலும், நீதிபதியின் முன்பு செய்யும் ஆங்கில வாதத்தை புரிந்துகொள்ள முடியாது. அன்னிய மொழியில் நடைபெறும் இந்த வாதத்தில், தான் கொடுத்த விவரங்களை எல்லாம் நீதிபதியிடம் தன் வக்கீல் எடுத்துக்கூறினாரா? என்றும் தெரியாது.
ஜனாதிபதி அதிகாரம்
ஆனால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 348-வது பிரிவு, சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டுகளில் ஆங்கிலம் மட்டும்தான் அலுவல் மொழியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது. அதேநேரம் 348 (2) ஐகோர்ட்டில் வழக்காடும் மொழியாக அந்தந்த மாநில மொழியை அறிவிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு என்கிறது. இந்த அதிகாரத்தின்படிதான் அலகாபாத், பாட்னா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 ஐகோர்ட்டுகளில் வழக்காடும் மொழியாக இந்தி உள்ளது. எனவே, சென்னை ஐகோர்ட்டு, ஐகோர்ட்டு மதுரை கிளையில் தமிழை வழக்காடும் மொழியாக ஜனாதிபதி அறிவித்தால், என்னென்ன விளைவுகள் ஏற்படும்? இதுகுறித்து வக்கீல்களிடம் கேட்டபோது, அவர்கள் கூறியது.
தீர்மானம்
வக்கீல்கள் சமூக நீதி பேரவை தலைவர் வக்கீல் கே.பாலு:- தி.மு.க, ஆட்சிக்காலத்தில் அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி, 2006-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி அம்பேத்கரின் நினைவு நாள் அன்று இதற்கான தீர்மானத்தை சட்டசபையில் இயற்றினார். பின்னர், இந்த தீர்மானம் அப்போதைய ஜனாதிபதி அப்துல்கலாமுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அவர், மத்திய சட்டத்துறையின் கருத்தை கேட்டார். ஆனால், சட்டத்துறை தேவையில்லாமல் சுப்ரீம் கோர்ட்டின் கருத்தை கேட்டது.
அப்போது தலைமை நீதிபதியாக இருந்த கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான மூத்த நீதிபதிகள் குழு, இந்த கோரிக்கையை நிராகரித்தது. வெளிமாநிலத்தில் இருந்து ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக வருபவருக்கு உள்ளூர் மொழி தெரியாது என்று அதற்கு விளக்கமும் அளித்தது.
தலைமை நீதிபதி ஏ.பி.ஷா
ஆனால், தமிழை வழக்காடும் மொழியாக்குவதற்கு அப்போதைய ஐகோட்டு தலைமை நீதிபதி ஏ.பி.ஷா முழு ஆதரவை கொடுத்தார். அவர், ஐகோர்ட்டு உள்பட அனைத்து கோர்ட்டுகளிலும் தமிழ் மென்பொருளை கொண்டுவர வேண்டும். மொழி பெயர்ப்புக்குழுவையும், மாநில ஆட்சி மொழி ஆணையத்தையும் உருவாக்க வேண்டும் என்று 12 பரிந்துரைகளை தமிழ்நாடு அரசுக்கு 2006-ம் ஆண்டு அனுப்பிவைத்தார். இந்த பரிந்துரைகள் நிறைவேற்றப்படும் என்று அப்போது சட்டசபையில் உறுதி அளித்தாலும், இதுவரை செய்யவில்லை.
இந்தியும் வரட்டுமே...?
வக்கீல் எம்.பாஸ்கர் கூறியது:- பாரத பிரதமர் நரேந்திர மோடி கூட அண்மையில், மாநில ஐகோர்ட்டுகளில் அந்தந்த வட்டார மொழிகளை அலுவல் மொழியாக கொண்டுவர வேண்டும் என்று கூறியுள்ளார். எனவே, தமிழை வழக்காடும் மொழியாக கொண்டு வருவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. அதேநேரம், இந்தி தெரிந்த மாநிலங்களில் இருந்து வரும் நீதிபதிகளுக்கும், வக்கீல்களுக்கும் பாதிப்பு வரக்கூடாது. அதனால், ஐகோர்ட்டில் வழக்காடும் மொழியாக ஆங்கிலம், தமிழ் ஆகியவற்றுடன் இந்தியையும் சேர்க்க வேண்டும். இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் வராது.
தமிழ் தெரிந்தவர், தமிழ்நாட்டை தாண்டி செல்லும்போது, அங்குள்ள வட்டார மொழி அல்லது நாட்டின் பொதுவான தேசிய மொழியான இந்தியில்தான் பேச வேண்டும். இந்தியையும் தமிழுடன் சேர்த்து வழக்காடும் மொழியாக கொண்டு வரும்போது, சென்னை ஐகோர்ட்டில் பிறப்பிக்கப்படும் தீர்ப்புகள் நாடு முழுவதும் எதிரொலிக்கும்.
வேப்பங்காய்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் துணைத்தலைவர் வேலு கார்த்திகேயன்:- தமிழ்நாட்டில் உள்ள பெருநகர மாணவர்களை மட்டும் கருத்தில் கொண்டு, அனைவருக்கும் ஆங்கிலம் சரளமாக பேச தெரியும் என்று கூறிவிடக்கூடாது. இன்றும் கிராமப்புற, நகர்ப்புற பள்ளிகளில் தமிழ்வழிகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கின்றனர். அவர்களுக்கு ஆங்கிலம் ஒரு வேப்பங்காய் போலத்தான் உள்ளது. அன்னிய மொழி மூளைக்குள் ஏறவில்லை. அதற்காக அவர்களை குறைத்து மதிப்பிடக்கூடாது. தாய்மொழி கல்வியில் தலைசிறந்து விளங்குகின்றனர். ஆங்கிலம் தெரிந்தவர்கள் மட்டுமே அறிவாளி என்ற எண்ணம் பலரிடம் உள்ளது. ஆங்கிலம் என்பது ஒரு மொழிதான்.
புதிய வக்கீல்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சியின்போது, ஆங்கிலத்தை விட தமிழில் நாங்கள் பேசும்போதுதான் வரவேற்பு அதிகம் உள்ளது.
சிறப்பாக வாதாடுவார்கள்
ஆங்கிலம் சரளமாக பேசத்தெரியாத வக்கீல்கள் ஐகோர்ட்டுக்கு வராமல், மாவட்ட மற்றும் தாலுகா அளவிலான கோர்ட்டுகளில் மட்டும் தொழில் செய்கின்றனர்.
அவர்களை ஐகோர்ட்டில் தமிழில் வாதிட அனுமதிக்கும்போது, தங்கள் தரப்பு வாதங்களை சிறப்பாக எடுத்து வைப்பார்கள். ஏன் ஆங்கிலத்தில் வாதாடும் வக்கீல்களை விட இவர்கள் சிறப்பாக வாதாடுவார்கள்.
ஆங்கில தீர்ப்புகள் அனைத்தும் தமிழில் மொழிபெயர்த்து சட்ட இதழாக வெளியிட மாவட்ட நீதிபதி தலைமையில் தீர்ப்பு திரட்டு என்று ஒரு தனித்துறையே ஐகோர்ட்டில் உள்ளது. எனவே, தகவல் தொழில்நுட்பம் வளர்ந்த காலத்தில் தாய்மொழியில் வாதம் செய்ய அனுமதிக்க வேண்டும்.
கம்பீரம்
சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் ஆர்.கிருஷ்ணமூர்த்தி:- கீழ் கோர்ட்டுகளில், எப்.ஐ.ஆர். முதல் தீர்ப்பு வரை எல்லாமும் தமிழில்தான் நடக்கிறது. ஆனால், ஐகோர்ட்டை பொறுத்தவரை தமிழில் வழக்காட முடியாது.
ஆங்கிலத்தில் வாதம் செய்து, வழக்கில் வெற்றி பெறுவதுதான் ஒரு கம்பீரம். இப்போது தமிழில் வழக்காடலாம் என்று அனுமதி வழங்கினால், வீட்டில் பேசுவது போல கோர்ட்டிலும் பேசுகிறேன் என்று தங்கள் வழக்கிற்கு தாங்களே வாதாட மக்கள் வந்து விடுவார்கள். அதனால், வக்கீல்கள் வருமானம் இழந்து கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
மேலும், சுப்ரீம் கோர்ட்டுக்கு மேல்முறையீடு செய்யும்போது, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு துல்லியமாக மொழிபெயர்க்க முடியாது.
மேலும், வழக்காடும் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானம் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டு விட்டதால், ஐகோர்ட்டில் தமிழ் வழக்காடும் மொழியாக ஒருபோதும் வராது.
சிறப்பு அனுமதி
ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் எஸ்.வர்ஷா:- பழைய சொத்துப்பதிவுகள், பூர்வீகப்பெயர்கள், கோவில்களின் வரலாறு மற்றும் தமிழ் வரலாற்று அர்த்தங்கள் தொடர்பான சில வகையான வழக்குகளுக்கு தமிழ் கண்டிப்பாக உதவும். ஆனால், மற்ற மாநிலங்களைச் சேர்ந்த நீதிபதிகள், இடமாற்ற அடிப்படையில் இங்கு வரும்போது, தமிழில் விசாரணையை நடத்தினால், அவருக்கு மொழி தெரியாது. அதனால், வழக்குகளை விசாரிப்பதில் சிக்கல் ஏற்படும். மேலும், வருமான வரி, நிறுவனம் உள்ளிட்ட பெரும்பாலான சட்டங்கள் ஆங்கிலத்தில்தான் வருகிறது.
எனவே, வக்கீல்கள் சிறந்த வாதங்களை முன்வைக்க, தகுதியான வழக்குகளில் ஐகோர்ட்டின் சிறப்பு அனுமதியை பெற்று, தமிழில் வழக்குகளை நடத்த சட்டத்தில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும், அது வக்கீல்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். இருப்பினும், பொதுமக்கள் மற்றும் தமிழ் வக்கீல்களின் நலனுக்காக சமீபத்திய சட்டங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டால் மட்டுமே இது சாத்தியமாகும்.