கரூர்
ஐகோர்ட்டில் வழக்காடும் மொழியாக தமிழை கொண்டு வந்தால் நன்மை தருமா?
|ஆங்கில வார்த்தைகள் இப்போது தமிழ்மொழியுடன் கலந்து அதிகம் உச்சரிக்கப்பட்டாலும், பல கடினமான ஆங்கில சொற்களுக்கு இன்றும் விளக்கம் தெரியாதவர்கள் பலர் உள்ளனர். அதுவும் சட்டம் தொடர்பான ஆங்கில சொற்களுக்கு கூடுதல் விளக்கம் தேவைப்படுகிறது.
சாமானியனுக்கு தெரியாது
நீதி கேட்டு ஐகோர்ட்டுக்கும், சுப்ரீம் கோர்ட்டுக்கும் சாமானிய மனிதன் சென்றால், அங்கு நடைபெறும் வழக்கு விசாரணை குறித்து அவருக்கு எதுவும் தெரியாது.
தன் வக்கீலும், எதிர்தரப்பு வக்கீலும், நீதிபதியின் முன்பு செய்யும் ஆங்கில வாதத்தை புரிந்துகொள்ள முடியாது. அன்னிய மொழியில் நடைபெறும் இந்த வாதத்தில், தான் கொடுத்த விவரங்களை எல்லாம் நீதிபதியிடம் தன் வக்கீல் எடுத்துக்கூறினாரா? என்றும் தெரியாது.
ஜனாதிபதி அதிகாரம்
ஆனால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 348-வது பிரிவு, சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டுகளில் ஆங்கிலம் மட்டும்தான் அலுவல் மொழியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது. அதேநேரம் 348 (2) ஐகோர்ட்டில் வழக்காடும் மொழியாக அந்தந்த மாநில மொழியை அறிவிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு என்கிறது. இந்த அதிகாரத்தின்படிதான் அலகாபாத், பாட்னா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 ஐகோர்ட்டுகளில் வழக்காடும் மொழியாக இந்தி உள்ளது.
எனவே, சென்னை ஐகோர்ட்டு, ஐகோர்ட்டு மதுரை கிளையில் தமிழை வழக்காடும் மொழியாக ஜனாதிபதி அறிவித்தால், என்னென்ன விளைவுகள் ஏற்படும்? இதுகுறித்து வக்கீல்களிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-
நீண்டநாள் கோரிக்கை
கரூர் வக்கீல் தமிழ்வாணன்:- ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது தமிழக வக்கீல்களின் நீண்டநாள் கோரிக்கையாகும். அலகாபாத், பாட்னா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 ஐகோர்ட்டுகளில் வழக்காடும் மொழியாக இந்தி உள்ளது. தி.மு.க., ஆட்சிக்காலத்தில் அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி, இதற்கான தீர்மானத்தை சட்டசபையில் இயற்றினார். அனைத்து தரப்பினரும் எளிமையாக தங்கள் தாய்மொழியிலேயே தீர்ப்புரைகளை தெரிந்து கொள்ள இந்த நடைமுறை அவசியம் ஆகும்.
சாத்தியம் இல்லை
வேலாயுதம்பாளையம் அருகே உள்ள கந்தம்பாளையத்தை சேர்ந்த வக்கீல் மணிவேல்:- சட்டம் இயற்றப்பட்ட காலத்தில் இருந்து நீதிமன்றங்களில் வக்கீல்கள் வாதாடுவதும், நடுவர் தீர்ப்புகள் வழங்குவது ஆங்கிலத்தில் தான். ஒரே முறைதான் தமிழில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த வழக்கு தான் சென்னை சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால்-ஜீவஜோதி வழக்கு. கீழ் நீதிமன்றங்களில் தமிழில் வாதாடினாலும், தீர்ப்புகள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் வருகின்றது. ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் ஆங்கிலத்தில் தான் வாதாட முடியும். தமிழில் வாதாடி, தீர்ப்புகள் தமிழில் வழங்க வேண்டும் என்றால் மொழி பெயர்ப்பு, கால தாமதம், எழுத்து பிழைகள் ஏற்பட வாய்புகள் இருக்கிறது. தமிழிலே ஒவ்வாரு மாவட்டத்திற்கும் ஏற்றார்போல் பேச்சு தமிழ் உள்ளது. அதற்கு ஏற்றார் போல் வாதாடுவது மிகவும் சிரமம். ஆகையால் கோர்டுகளில் தமிழில் வாதாடுவது சாத்தியம் இல்லை.
தமிழில் மொழிபெயர்க்க வேண்டும்
குளித்தலை முன்னாள் அரசு வக்கீல் மனோகரன்:- நீதிமன்றம் என்பது பாதிக்கப்பட்ட மற்றும் வழக்காடிகளுக்கு நீதி வழங்கக்கூடிய துறை. நீதியைத் தேடி வருபவர்களுக்கு அவர்களின் வழக்கு விசாரணையும் தீர்ப்புகளையும் அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியிலேயே இருக்க வேண்டும். அப்படி வழங்கப்படும் நீதி தான் வழக்காடிகளுக்கு முழுமையான புரிதலை தரும். தமிழகத்தில் வக்கீல்களும், நீதிபதிகளும் தங்களது தாய் மொழியான தமிழிலேயே படித்து முடித்துள்ளனர். எனவே வழக்கு விசாரணைகளும் தீர்ப்புகளும் தமிழிலேயே இருக்க வேண்டும். அதற்கு அடிப்படையாக அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் அரசே அனைத்து சட்டங்களையும் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும்.
பொதுமக்களின் எதிர்பார்ப்பு
நொய்யல் அருகே சேமங்கி பகுதியை சேர்ந்த வக்கீல் உமாதேவி:- நீதிமன்றங்களில் வக்கீல்கள் தமிழில் வாதாடும்போது என்ன வாதாடுகிறார்கள் என்று குற்றவாளிகளும், வாதிகளும் தெரிந்துகொள்ள வாய்ப்புள்ளது. ஆங்கிலத்தில் வாதாடும்போது ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு என்ன பேசுகிறார்கள் என்றே தெரியாது. அதனால் அனைவரும் வாதாடுவதை கேட்கும் அளவுக்கு தமிழ் மொழியை வழக்காடு மொழியாக விரைவில் கொண்டு வருவார்கள். தமிழக முதல்-அமைச்சரும் நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதியிடம் கோரிக்கை வைத்துள்ளார். அவர்களும் தமிழ்நாட்டில் வழக்காடு மொழியாக தமிழை கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர். அதேபோல் மத்திய அரசும் தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக அறிவித்து பொதுமக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார்கள்.
தமிழில் வாதாடுவதே சிறந்தது
தோகைமலையை சேர்ந்த வக்கீல் கருப்பையா:- தாலுகா நீதிமன்றத்தில் தமிழிலும், மாவட்ட நீதிமன்றத்தில் ஆங்கிலத்திலும் வாதாடி வருகிறேன். சென்னை ஐகோர்ட்டு, ஐகோர்ட்டு மதுரை கிளையில் தமிழை வழக்காடும் மொழியாக அறிவித்தால் எனது கட்சிக்காரருக்கு நான் எடுத்துரைக்கக்கூடிய கருத்துக்கள் நன்றாக புரிந்து கொள்ள முடியும். நான் ஆங்கிலத்தில் வாதாடும் பொழுது என்னுடைய கட்சிக்காரருக்கு அது புரியாமல் போக வாய்ப்புள்ளது. எனவே தமிழில் வாதாடுவதே சிறந்தது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.