< Back
சினிமா செய்திகள்
திட்டமிட்ட தேதியில் வருமா? பொன்னியின் செல்வன் 2 ரீலீஸ் வதந்திக்கு விளக்கம்
சினிமா செய்திகள்

திட்டமிட்ட தேதியில் வருமா? 'பொன்னியின் செல்வன் 2' ரீலீஸ் வதந்திக்கு விளக்கம்

தினத்தந்தி
|
3 March 2023 8:46 AM IST

'பொன்னியின் செல்வன் 2' படத்தின் 'மேக்கிங்' வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டு அதில் ஏப்ரல் 28-ல் படம் ரிலீசாவதை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளனர்.

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், திரிஷா, ஐஸ்வர்யா ராய் என்று பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து கடந்த வருடம் வெளியான பொன்னியின் செல்வன் படம் பெரிய வெற்றி பெற்று வசூல் சாதனை நிகழ்த்தியது.

தற்போது பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்து இருக்கிறார்கள். இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28-ந்தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் ஏற்கனவே தெரிவித்து இருந்த நிலையிலும் கிராபிக்ஸ் பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டு உள்ளதாகவும் எனவே ரிலீஸ் தள்ளிப்போகலாம் என்றும் வலைத்தளத்தில் வதந்திகள் பரவி வந்தன.

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் 'பொன்னியின் செல்வன் 2' படத்தின் 'மேக்கிங்' வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டு அதில் ஏப்ரல் 28-ல் படம் ரிலீசாவதை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளனர். பாடல் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழாவை சென்னை நேரு விளையாட்டு அரங்கில் வருகிற 29, 30 அல்லது ஏப்ரல் 5 ஆகிய 3 நாட்களில் ஏதாவது ஒரு நாளில் நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தில் 6 பாடல்கள் இருக்கும் என்றும் இதில் ஆதித்த கரிகாலனான விக்ரமை கொலை செய்யும் காட்சிகள் படுபயங்கரமாக படமாக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

யுத்த களத்தில் தோற்கடித்து விக்ரம் கொல்லாமல் உயிர் பிச்சை அளித்த அரசன் பாபு ஆண்டனி, விக்ரமால் கொலை செய்யப்பட்ட மன்னன் வீரபாண்டியனின் ஆட்கள் மற்றும் பழுவேட்டரையர் ஆகியோரின் சதி செயல்களும் தொடர்ந்து விக்ரம் கொலை செய்யப்படும் படலமும் படத்தில் பரபரப்பான காட்சியாக இருக்கும் என்று கூறுகிறார்கள். ஐஸ்வர்யா ராய் சஸ்பென்ஸ் காட்சிகளும் பிரமிப்பாக இருக்கும் என்றனர்.

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.

மேலும் செய்திகள்