கரூர்
வாங்கல் குப்பை கிடங்கில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்படுமா?
|வாகன ஓட்டிகளின் சிரமத்தை போக்க வாங்கல் குப்பை கிடங்கில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
சாலையோரம் குவியும் குப்பைகள்
கரூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதற்கு முன்பு கரூர் நகராட்சி, தாந்தோணி நகராட்சி, இனாம் கரூர் நகராட்சி என 3 நகராட்சிகளாக இருந்து வந்தது. அப்போது தாந்தோணி நகராட்சி, இனாம் கரூர் நகராட்சி ஆகிய 2 நகராட்சிகளை கரூர் நகராட்சியுடன் இணைத்து கரூர் பெருநகராட்சியாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தரம் உயர்த்தப்பட்டது.
இதனையடுத்து கரூர் பெருநகராட்சி 48 வார்டுகளை கொண்ட நகராட்சியாக திகழ்ந்து வந்தது. இதனால் 48 வார்டுகளில் உள்ள வீடுகள் மற்றும் கடைகள் உள்ளிட்ட இடங்களில் தேங்கும் குப்பை மற்றும் கழிவுகளை அரசு காலனியில் இருந்து சற்று தொலைவில் உள்ள கரூர் வாங்கல் சாலையோரங்களில் கொட்டப்பட்டு வந்தன.
சிரமம்
இவ்வாறு சாலையின் இரு புறங்களிலும் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு வந்த நிலையில் அங்கு குப்பைகள் மலை போல் தேங்கும் நிலை ஏற்பட்டது. இதனால் அந்த குப்பை கிடங்கில் கோடை காலங்களில் அதிகவெப்பத்தின் காரணமாக அவ்வப்போது குப்பைகள் தீப்பிடித்து எரியும் நிலை ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக மோட்டார் சைக்கிள் மற்றும் 4 சக்கர வாகனங்களில் செல்பவர்கள் அந்த இடத்தை கடக்கும்போது கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். மேலும் அப்போது ஏற்படும் புகை மண்டலத்தால் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வந்தது. இதனால் குப்பை கிடங்கை சுற்றி சுவர் கட்டப்பட்டது.
கோரிக்கை
இருப்பினும் குப்பை கிடங்கின் சுவற்றினை தாண்டி மிக அதிக அளவிலான குப்பைகள் தேங்கி உள்ளது. தற்போது கரூர் மாவட்டத்தில் ஆனி, ஆடி மாதங்களில் காற்று பலமாக வீசும். இதனால் குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகள் காற்றில் பறந்து சாலைகளில் விழுந்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும்.
எனவே சுற்றுசுவருக்கு மேல் பகுதியில் இரும்பு தடுப்புகள் அமைத்து குப்பைகள் காற்றில் பறந்து செல்லாதபடி இரும்பு தடுப்புகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.