< Back
மாநில செய்திகள்
வட்டி, அபராதம் ரத்து செய்யப்படுமா?
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

வட்டி, அபராதம் ரத்து செய்யப்படுமா?

தினத்தந்தி
|
24 May 2023 1:15 AM IST

வட்டி, அபராதம் ரத்து செய்யப்படுமா?

கருமத்தம்பட்டி1

மின்கட்டண நிலுவை தொகைக்கு வட்டி, அபராதம் ரத்து செய்யப்படுமா? என்று விசைத்தறியாளர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

மின்கட்டண உயர்வு

கோவை திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. கடந்த பத்து ஆண்டுகளாக உரிய கூலி உயர்வு இன்றி தொழில் மந்த நிலையில் இருந்த சூழ்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ம் தேதி அரசால் 30 சதவீத மின் கட்டணம் விசைத்தறிகளுக்கு உயர்த்தி அறிவிக்கப்பட்டது. அப்போதைய சூழ்நிலையில் மின் கட்டண உயர்வால் தொழிலே அழிந்து விடும் என்றும் விசைத்தறி தொழிலுக்கான மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் எனவும் மேலும் விசைத்தறி தொழிலை காக்க மின் கட்டண சலுகை வழங்க வேண்டும் என கோவை-திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் தமிழக முதல்-அமைச்சர், மின்சார துறை அமைச்சர் மற்றும் மின் வாரிய அதிகாரிகளிடம் தொடர்ந்து கோரிக்கையும், வேண்டுகோளும் வைத்தனர்.

கட்டணம் குறைப்பு

அதனை தொடர்ந்து இந்த ஆண்டு மார்ச் மாதம் 3-ந் தேதி தமிழக முதல்வர் விசைத்தறியாளர்களின் வாழ்வாதாரம் காக்க உயர்த்திய மின் கட்டணத்தில் 50 சதவீதம் குறைத்தும் மேலும் விலையில்லா மின்சாரம் விசைத்தறிகளுக்கு 750 யூனிட்டில் இருந்ததை 1000 யூனிட்டாக உயர்த்தியும் அறிவித்தார்.

அதனை தொடர்ந்து கேள்விக்குறியாக இருந்த விசைத்தறி மற்றும் அதன் சார்பு தொழில்களின் நிலை மாறி விறுவிறுப்பானது. இந்த அறிவிப்பால் தற்போது கோவை - திருப்பூர் மாவட்ட பகுதிகளில் சுமார் 80 சதவீதம் விசைத்தறிகள் இயங்கத் தொடங்கி உள்ளன. இந்த நிலையில் விசைத்தறியாளர்கள் மின் கட்டணம் உயர்த்தியதிலிருந்து 6 மாத காலம் முதல்-அமைச்சர் சலுகை அறிவிக்கும் வரை மின் கட்டணத்தை செலுத்தாமல் இருந்தனர்.

ரத்து செய்ய கோரிக்கை

அதனால் விசைத்தறி உரிமையாளர்களுக்கு கட்டண நிலுவை தொகையுடன், கூடவே அதற்கான அபராதமும், வட்டியும் சேர்ந்து விட்டது. இந்த நிலையில் மின்கட்டண நிலுவைத் தொகையை தவணை முறையில் விசைத்தறி உரிமையாளர்கள் செலுத்தலாம் என மின்வாரியத்துறை அறிவித்துள்ளது. ஆனால் கூலிக்கு நெசவு செய்யும் தாங்கள் மின் கட்டண நிலுவை தொகையை அரசு வழங்கிய கால அவகாசத்தில் செலுத்தி விடுவதாகவும், அதற்கான அபராதத்தையும், வட்டியையும் தொழில் நலன்கருதி ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை வைத்து உள்ளனர்.

இது குறித்து மின் வாரிய துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் மின் வாரிய தலைவர், இயக்குனர் ஆகியோர்களை நேரில் சந்தித்து மனு அளித்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.

மேலும் இது தொடர்பாக சமீபத்தில் கோவை வந்த ஈ.ஆர்.ஈஸ்வரனை எம்.எல்.ஏ.விடமும், கோவை-திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு செயலாளர் பி.குமாரசாமி தலைமையிலான நிர்வாகிகள் சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவை பெற்றுக்கொண்ட அவர் மின் துறை அமைச்சரை நேரில் சந்தித்து பேசி பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்ததாக கூறினர்.

எது எப்படியோ மின்கட்டண நிலுவை தொகைக்கு வட்டி, அபராதம் ரத்து செய்யப்படுமா என்று விசைத்தறியாளர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

மேலும் செய்திகள்