கடலூர்
மயில்களை வனத்துறை பாதுகாக்குமா
|கிள்ளை பகுதியில் சுற்றித்திரியும் மயில்களை வனத்துறை பாதுகாக்குமா
பரங்கிப்பேட்டை
சிதம்பரம் அருகே கிள்ளை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் பிச்சாவரம் சுற்றுலா மையம் உள்ளது. இது சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட சதுப்பு நிலக்காடுகள் ஆகும். இந்த இயற்கை அழகை கண்டு ரசிக்க மக்கள் கூட்டம் வருவதை போல, இந்த சதுப்பு நில காடுகளில் வெளியில் இருந்து ஏராளமான பறவைகள் வந்து வசித்து வருகின்றன.
இதே போல் கிள்ளை வனத்துறைக்கு சொந்தமான பகுதியில் மயில்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிவதையும் காண முடிகிறது. கிள்ளை மெயின் ரோடு பகுதியில் நூற்றுக்கணக்கான மயில்கள் சாலையை கடந்து வயல் பகுதிக்கு கூட்டம் கூட்டமாக சென்றதை அறிந்து அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலையோரமாக நின்று மயில்களை வேடிக்கை பார்த்தனர். சிலர் தங்கள் செல்போன்களில் படம் பிடித்தனர். மயில்கள் சாலையை கடப்பதால் வாகனங்களில் அடிபட்டு இறந்து விடும் நிலை உள்ளது. மேலும் மர்மநபர்கள் மயில்களை வேட்டையாடவும் வய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே பாதுகாப்பு இல்லாத நிலையில் சுற்றித்திரியும் மயில்களை பாதுகாக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் விலங்கியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.