பெரம்பலூர்
பொங்கல் பண்டிகைக்கு கூடுதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுமா?
|பொங்கல் பண்டிகைக்கு கூடுதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுமா? என பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.
அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தை ேசர்ந்த இளைஞர்கள் படிப்பு, வேலை, தொழில் நிமித்தமாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வசித்து வருகிறார்கள். இவர்கள் பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் உறவினர்கள், நண்பர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
பொங்கல் பண்டிகைக்கு ரெயில்களில் முன்பதிவு 'டிக்கெட்டு' கிடைப்பது என்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது. 4 மாதங்களுக்கு முன்பு தொடங்கிய டிக்கெட்டு முன்பதிவு ஒரு சில நிமிடங்களில் முடிந்தது. குறிப்பாக தென் மாவட்ட ரெயில்கள் அனைத்திலும் டிக்கெட்டுகள் காலியாகி காத்திருப்போர் பட்டியல் நீள்கிறது.
பயணிகள் ஏமாற்றம்
இந்த நிலையில் தாம்பரத்தில் இருந்து நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்தது. இந்த ரெயில்களுக்கான டிக்கெட்டு முன்பதிவு கடந்த 29-ந்தேதி தொடங்கியது. ஆனால் முன்பதிவு தொடங்கிய வேகத்திலே சிறப்பு ரெயில்களிலும் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.
வழக்கமான ரெயில்களில் டிக்கெட்டு கிடைக்காதவர்கள் சிறப்பு ரெயில்களிலும் டிக்கெட்டு கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
எனவே பொங்கல் பண்டிகைக்கால பயணிகள் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு தெற்கு ரெயில்வே நிர்வாகம் கூடுதல் சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து இருக்கிறது. இதுகுறித்து பயணிகள் தெரிவித்த கருத்து வருமாறு:-
கூடுதல் பஸ்கள்
பெரம்பலூர் சங்குபேட்டையை சேர்ந்த மாரிமுத்து:- பண்டிகை காலங்களை வெளியூர்களில் வேலை பார்க்கும் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவது வழக்கம். இதையொட்டி மத்திய அரசு சார்பில் சிறப்பு ரெயில்கள் இயக்கினாலும், தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கினாலும், அதில் பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் ரெயில் போக்குவரத்து கிடையாது. இதனால் பொதுமக்கள் பஸ்களில் தான் பயணம் செய்ய முடிகிறது. ரெயில் போக்குவரத்து இல்லாததால் பெரம்பலூர் வழியாக செல்லும் பஸ்களில் கூட்டம் அதிகமாக காணப்படும். பெரம்பலூர் மாவட்டத்தில் தங்கியிருந்து வேலை பார்க்கும் பொதுமக்கள் பண்டிகை காலங்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வருவதற்குள் படாதபாடு படுகின்றனர். ரெயில்வே வசதி இல்லாத பெரம்பலூர் மாவட்டத்துக்கு வருகிற பொங்கல் பண்டிகையையொட்டி கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ரெயில் போக்குவரத்து வசதி மாவட்டத்துக்கு கொண்டு வர மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அய்யப்ப பக்தர்கள்
பெரம்பலூரை சேர்ந்த தேவி:- தற்போது மாலை அணிந்து விரதமிருக்கும் அய்யப்ப பக்தர்கள், முருகன் பக்தர்கள், ஆதிபராசக்தி பக்தர்கள் கோவில்களுக்கு செல்வது வழக்கம். இதனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பஸ்களில், ரெயில்களிலும் கூட்டம் அலைமோதும். எனவே தமிழக அரசு கூடுதல் சிறப்பு பஸ்களை இயக்கவும், மத்திய அரசு தமிழகத்தில் கூடுதல் சிறப்பு பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.