அரியலூர்
பொங்கல் பண்டிகைக்கு கூடுதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுமா?
|பொங்கல் பண்டிகைக்கு கூடுதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுமா? என பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் படிப்பு, வேலை, தொழில் நிமித்தமாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வசித்து வருகிறார்கள். இவர்கள் பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் உறவினர்கள், நண்பர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
பொங்கல் பண்டிகைக்கு ரெயில்களில் முன்பதிவு 'டிக்கெட்டு' கிடைப்பது என்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது. 4 மாதங்களுக்கு முன்பு தொடங்கிய டிக்கெட்டு முன்பதிவு ஒரு சில நிமிடங்களில் முடிந்தது. குறிப்பாக தென் மாவட்ட ரெயில்கள் அனைத்திலும் டிக்கெட்டுகள் காலியாகி காத்திருப்போர் பட்டியல் நீள்கிறது.
பயணிகள் ஏமாற்றம்
இந்த நிலையில் தாம்பரத்தில் இருந்து நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்தது. இந்த ரெயில்களுக்கான டிக்கெட்டு முன்பதிவு கடந்த 29-ந்தேதி தொடங்கியது. ஆனால் முன்பதிவு தொடங்கிய வேகத்திலே சிறப்பு ரெயில்களிலும் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.
வழக்கமான ரெயில்களில் டிக்கெட்டு கிடைக்காதவர்கள் சிறப்பு ரெயில்களிலும் டிக்கெட்டு கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
எனவே பொங்கல் பண்டிகைக்கால பயணிகள் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு தெற்கு ரெயில்வே நிர்வாகம் கூடுதல் சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து இருக்கிறது. இதுகுறித்து பயணிகள் தெரிவித்த கருத்து வருமாறு:-
ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூல்
அரியலூர் மாவட்டம் திருமானூரை சேர்ந்த பாலசுப்பிரமணியன்:- தென்னக ரெயில்வே சிறப்பு ரெயில்களை எழும்பூர் முதல் நாகர்கோவில் வரை மட்டுமே இயக்குகிறது. ஆனால் இந்த சிறப்பு ரெயில்கள் அரியலூரில் நிற்பதே இல்லை. ஏற்கனவே அரியலூரில் நின்று சென்ற முத்துநகர், சேது எக்ஸ்பிரஸ் ரெயில்கள் கொரோனா தடைகாலத்தில் இருந்து நிற்பதே இல்லை. தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு அரியலூர் வழியாக செல்லும் ஆம்னி பஸ்கள் பண்டிகை காலங்களில் 2 முதல் 3 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குறைந்த கட்டணம், சிரமம் இல்லாத பயணம், ரெயில் பயணம் என்பதால் மக்கள் பெரிதும் ரெயில் பயணத்தையே விரும்புகிறார்கள். எனவே தென்னக ரெயில்வே எழும்பூரிலிருந்து நாகர்கோவில் வரை தினசரி முன்பதிவில்லா அந்தியோதயா ரெயிலை அரியலூர் வழியாக இயக்க வேண்டும். இதேபோல் அரியலூரில் நின்று சென்ற முத்துநகர், சேதுஎக்ஸ்பிரஸ் ரெயில்கள் மீண்டும் இப்பகுதியில் நின்று செல்லும் வகையில் ஏற்பாடு செய்து தரவேண்டும். தஞ்சாவூரில் இருந்து கீழப்பழுவூர், அரியலூர் வழியாக விரைவு சொகுசு பஸ்களை போக்குவரத்து கழகம் இயக்கினால் தான் பயணிகள் நெரிசலைக் குறைத்து, சிரமம் இல்லாமல் பயணம் செய்யமுடியும். மேலும், தனியார் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மன உளைச்சல்
மீன்சுருட்டியை சேர்ந்த ஜோதிபாசு:- சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை நாட்களில் சிறப்பு ரெயில்களுக்கான டிக்கெட் சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்து விடுகின்றன. இதனால் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு ெசல்பவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதேபோல் பண்டிகை நாட்களில் 1,500-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆனால் நாங்கள் வரும் போது தனியார் பஸ்களில் அதிக கட்டணம் கொடுத்து தான் வரவேண்டியுள்ளது. எனவே தென்மாவட்ட மக்களின் நலன் கருதி கூடுதலாக ரெயில்கள் மற்றும் அரசு பஸ்களை இயக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நின்று கொண்டே பயணம்
விக்கிரமங்கலம் அருகே ஸ்ரீபுரந்தான் கிராமத்தை சேர்ந்த அழகர்:- எனது மகன்கள் சென்னையில் பணிபுரிந்து வருகிறார்கள். எனவே பண்டிகை மற்றும் விழாக்காலங்களில் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு ரெயிலில் வருவது வழக்கம். ஆனால் பொங்கல், தீபாவளி அன்று இயக்கப்படும் சிறப்பு ரெயில்களில் டிக்கெட் கிடைப்பதில்லை. இதனால் முன்பதிவு இல்லாத சாதாரண வகுப்பு பெட்டியில் எப்படியாவது சென்றுவிடலாம் என்று நினைத்து ஏறினால் அங்கு நிற்பதற்கு கூட இடமில்லாமல் பல மணி நேரம் நின்று கொண்டே பயணம் செய்ய வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே விழாக்காலங்களில் தென்மாவட்டங்களுக்கு கூடுதலாக ரெயில்களை இயக்க ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குரல் கொடுக்க வேண்டும்
அரியலூரை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மூர்த்தி:- ஒவ்வொரு விழாக்களின் போதும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்கான அறிவிப்பு வந்தவுடன் அனைத்து முன்பதிவு இருக்கைகளும் நிரம்பி விடுகின்றன. குறிப்பாக தென் மாநிலங்களுக்கு எத்தனை ரெயில்கள் இயக்கப்பட்டாலும் போதுமானதாக இல்லை. இருந்தபோதிலும் கூடுதல் ரெயில்கள் இயக்கப்படுவதில்லை. இதற்காக தமிழக அரசும், தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களும் குரல் கொடுக்க வேண்டும்.
கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும்
தா.பழூரை ேசர்ந்த செந்தில்குமார்:- தமிழக அரசு பஸ் கட்டணங்களை உயர்த்திய பிறகு நீண்ட தூர பயணம் மேற்கொள்ளும் பயணிகள் ரெயில்களில் தான் பயணம் செய்கிறார்கள். சாதாரண கட்டணத்தில் பயணிப்பதற்கான பெட்டிகள் ரெயிலின் முன் பகுதியில் ஒன்றும், கடைசியில் ஒன்றும் என 2 பெட்டிகள் மட்டுமே இணைக்கப்படுகின்றன. இதனால் பயணம் தொடங்குவதில் இருந்து செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று சேரும் வரை பெரும்பாலான நேரங்களில் பயணிகள் நின்று கொண்டே தான் பயணம் செய்ய வேண்டி உள்ளது. எனவே பண்டிகை காலம் மட்டுமல்லாமல் எல்லா நேரங்களிலும் முக்கியமான வழித்தடங்களில் மட்டுமாவது ஒவ்வொரு ரெயிலிலும் கூடுதலாக முன் பகுதியில் ஒரு பெட்டியும் கடைசியில் ஒரு பெட்டியும் இணைக்க வேண்டும். இதன் மூலம் ரெயிலில் நின்று கொண்டு செல்பவர்களின் எண்ணிக்கை குறையும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.