< Back
மாநில செய்திகள்
சேதமடைந்த அரசு பள்ளி கட்டிடங்கள் அகற்றப்படுமா?
திண்டுக்கல்
மாநில செய்திகள்

சேதமடைந்த அரசு பள்ளி கட்டிடங்கள் அகற்றப்படுமா?

தினத்தந்தி
|
17 Oct 2022 12:15 AM IST

உயிர் பலி வாங்க காத்திருக்கும் சேதமடைந்த அரசு பள்ளி கட்டிடங்கள் அகற்றப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர்.

அரசு கட்டிடங்களின் பரிதாப நிலை


கால் காசுனாலும் அரசாங்க உத்யோகமாக இருக்க வேண்டும் என்ற ஆசை நம்மில் பலருக்கு இருக்கும். அரசு துறை அலுவலகங்களில் வேலை, அரசின் சலுகைகள் என அனைத்தையும் விரும்புபவர்கள் அவர்களின் பிள்ளைகளை மட்டும் பல மடங்கு கூடுதலாக கட்டணம் செலுத்தி தனியார் பள்ளிகளில் படிக்க வைப்பார்கள். அரசு பள்ளி கட்டிடங்களின் பரிதாபமான நிலை, மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் முறையாக கிடைக்காதது உள்ளிட்ட பல்வேறு குறைகளை தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்காததற்கு காரணமாகவும் கூறுவார்கள்.


அரசு பள்ளிகளில் மேற்கண்ட குறைகள் இருப்பதை இல்லை என்று மறுத்து பேசவும் முடியாது. ஏனென்றால் அரசு பள்ளி கட்டிடங்கள் பெரும்பாலும் பழமையான கட்டிடங்களாகவே இருக்கும். அவை முறையாக பராமரிக்கப்படுவதும் இல்லை. இதன் காரணமாக கட்டிடங்கள் அதன் உறுதி தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து ஒரு கட்டத்தில் இடிந்து விழும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன. அப்போது கட்டிடங்களின் அருகில் யாரும் இல்லை என்றால் உயிர் சேதம் இருக்காது. ஒருவேளை மாணவர்களோ, ஆசிரியர்களோ இருந்தால் அவர்கள் பரிதாபமாக உயிரிழக்க நேரிடும்.


அதிரடி நடவடிக்கை


பொதுவாக அரசு துறை என்றாலே ஒரு சம்பவம் நடந்த பின்னரே அதிரடி நடவடிக்கைகள் எடுக்கும் என்ற கூற்று பல்வேறு சம்பவங்களில் உறுதியாகியுள்ளது. உதாரணமாக கும்பகோணத்தில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ந்தேதி அப்பகுதியில் உள்ள தனியார் தொடக்க பள்ளியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி பலியாகினர். தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தின் எதிரொலியாக தனியார் பள்ளிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நெல்லையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அரசு உதவி பெறும் பள்ளியின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியாகினர்.


இதே மாதத்தில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்த தெளித்த நல்லூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. நல்லவேளையாக அப்போது பள்ளியில் யாரும் இல்லாததால் உயிர்பலி ஏதும் ஏற்படவில்லை. இதன் பின்னரே அரசு பள்ளி கட்டிடங்கள் மீது அதிகாரிகளின் கவனம் திரும்பியது. அதைத்தொடர்ந்து பழமையாக கட்டிடங்கள் கணக்கெடுக்கப்பட்டன. பின்னர் அவை இடித்து அகற்றப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் இன்னும் இந்த பணிகள் முழுமை பெறவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. அரசு பள்ளி கட்டிடங்களின் நிலை குறித்து திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-


கட்டிடங்களில் விரிசல்


திண்டுக்கல் பொன்னகரத்தை சேர்ந்த காஞ்சனா:- திண்டுக்கல்லில் உள்ள அரசு பள்ளி கட்டிடங்கள் பழமையான கட்டிடங்கள் ஆகும். பழனி ரோட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கட்டிடங்களில் பல்வேறு இடங்களில் விரிசல் விட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் கட்டிடத்துக்குள் மழைநீர் ஒழுகும் அபாயம் உள்ளது. அதேபோல் புறநகர் பகுதியில் சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் ஏராளமாக உள்ளன. அவை தற்போது பயன்பாட்டில் இல்லை என்றாலும் இடிக்கப்படாமல் உள்ளன. அவற்றை இடித்து அகற்ற வேண்டும்.


பழனியை சேர்ந்த பாலாஜி:- ஆன்மிக தலமான பழனியில் உள்ள அரசு பள்ளி கட்டிடங்கள் பழமையான கட்டிடங்கள் என்றாலும் அவ்வளவாக சேதம் ஏற்படவில்லை. ஆனால் பராமரிப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாமல் உள்ளது. இதனால் கட்டிடங்கள் மேலும் மோசமடைந்து இடிந்து விழும் அபாயம் உள்ளது. அவ்வாறு இடிந்து விழுந்தால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் அரசு பள்ளி கட்டிடங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதில் அதிகாரிகள் தங்கள் கவனத்தை செலுத்த வேண்டும்.


சீரமைக்க வேண்டும்


அய்யலூரை சேர்ந்த கவியோவிய தமிழன்:- வடமதுரை, அய்யலூர் பகுதிகளில் உள்ள அரசு பள்ளி கட்டிடங்களில் பல சேதமடைந்த நிலையில் தான் இருக்கிறது. அது தெரிந்திருந்தும் நடுத்தர வர்க்கத்தினர், ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் தங்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்கின்றனர். ஏனென்றால் அவர்களால் கூடுதல் கட்டணம் செலுத்தி தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க இயலாது.


பள்ளி கட்டிடத்தில் தீ விபத்து, கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் பலி போன்ற பல்வேறு நிகழ்வுகள் அவர்களின் நெஞ்சில் இடியாக இறங்கினாலும் தங்கள் குழந்தை எப்படியாவது கல்வி கற்று வாழ்வில் உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும் என்ற ஒற்றை காரணத்தால் தான் வலியை மனதில் மறைத்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகின்றனர். அவர்களின் வலியை அதிகாரிகள் உணர்ந்து அரசு பள்ளி கட்டிடங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


உறுதி தன்மையை ஆய்வு செய்ய வேண்டும்


நத்தத்தை சேர்ந்த கார்த்திகேயன்:- வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. மழையால் சேதமாவது குடியிருப்புகள் மட்டும் அல்ல. மழலைகள் கல்வி பயிலும் பள்ளி கட்டிடங்களும் தான். எனவே அரசு பள்ளி கட்டிடங்களின் உறுதி தன்மையை மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் ஆய்வு செய்ய வேண்டும்.


மாவட்ட பகுதியில் உள்ள சில பள்ளி கட்டிடங்களின் மேற்கூரை சிதிலமடைந்த நிலையில் உள்ளன. அவற்றை கண்டறிந்து உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மழைக்காலங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுவது போல் சில பள்ளிகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துவிடுகிறது. அதனை தடுக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிர் பலி வாங்க காத்திருக்கும் சேதமடைந்த அரசு பள்ளி கட்டிடங்களை அகற்ற வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் விருப்பம் ஆகும்.


மேலும் செய்திகள்