மயிலாடுதுறை
சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்கள் அகற்றப்படுமா?
|நாங்கூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்கள் அகற்றப்படுமா? என பெற்றோர் எதிர்பார்த்துள்ளனர்.
திருவெண்காடு:
நாங்கூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்கள் அகற்றப்படுமா? என பெற்றோர் எதிர்பார்த்துள்ளனர்.
சேதமடைந்த கட்டிடங்கள்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் வியாபாரிகள், சாலையில் பயணிப்பவர்கள், பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்டவர்களுக்கு இடையூறாக காணப்படும், முற்றிலும் சேதம் அடைந்து, பயன்பாட்டிற்கு உபயோகப்படாத அரசு கட்டிடங்களை அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு அவற்றை இடித்து பாதுகாப்பாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள நாங்கூரில் அரசினர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு 35 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் 3 சேதமடைந்த கட்டிடங்கள் உள்ளன. இந்த கட்டிடங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளதால் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே மாணவர்களின் நலன் கருதி இந்த கட்டிடத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வகுப்புகள் நடைபெறுவதில்லை.
இடித்து அப்புறப்படுத்த வேண்டும்
இந்த நிலையில் மாணவர்கள் இந்த பழுதடைந்த கட்டிடங்கள் வழியாக தங்கள் வகுப்பறைகளுக்கு சென்று வருகின்றனர். மேலும் தங்கள் சைக்கிள்களை இந்த கட்டிடங்களின் அருகிலேயே நிறுத்தி செல்கின்றனர். மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படும் இந்த கட்டிடங்களை இடித்து தரக்கோரி பள்ளி நிர்வாகத்தின் சார்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் மாணவர்களின் நலன் கருதி கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும் பெற்றோர்கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து முன்னாள் எம்.எல்.ஏ. பாரதி கூறுகையில் நாங்கூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் அதிக அளவில் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கல்வித்திறன் அதிகரித்து, தேர்ச்சி விகிதம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்தப் பள்ளியில் காணப்படும் பழுதடைந்த கட்டிடங்களை அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்னர் உடனடியாக அப்புறப்படுத்தி மாணவர்களின் நலன் காக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பள்ளிக்கு தேவையான புதிய வகுப்பறை கட்டிடம் உள்ளிட்ட வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறினார்.