< Back
மாநில செய்திகள்
சிவகாசி பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?
விருதுநகர்
மாநில செய்திகள்

சிவகாசி பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?

தினத்தந்தி
|
9 Oct 2023 12:30 AM IST

சிவகாசி பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

தொழில்நகரமான சிவகாசியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் 30 பஸ்கள் வந்து செல்ல வசதியாக இப்போது உள்ள பஸ் நிலையம் கட்டப்பட்டது. பின்னர் காலச்சூழ்நிலைக்கு ஏற்ப பஸ் நிலையம் சற்று விரிவாக்கம் செய்யப்பட்டது.இங்கிருந்து தினமும் 225 அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சிவகாசி சுற்றுப்பகுதியில் உள்ள சில கிராமங்களுக்கு சென்று வரும் வகையில் 25 மினி பஸ்களும் இங்கு தான் நிறுத்தி வைக்கப்படுகிறது. தினமும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் வந்து செல்லும் சிவகாசி பஸ் நிலையத்தில் போதிய குடிநீர், கழிப்பறை வசதிகள் இல்லை. கடந்த காலங்களில் பஸ் நிலையத்தின் உள்ளே குடிநீர் வசதி மற்றும் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறைகள் அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது ஒரு பகுதியில் விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில் இதற்காக தானியங்கி குடிநீர் எந்திரம், பாலூட்டும் அறைகள் அகற்றப்பட்டு விட்டது.

இங்கு புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அமர்ந்து இருந்தபடியே பஸ் நிலையத்தின் அனைத்து பகுதிகளையும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்க முடியும். ஆனால் இந்த புறக்காவல் நிலையம் எப்போதாவது செயல்படும் நிலை உள்ளது.இதனை 24 மணி நேரமும் சுழற்சி முறையில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். போதிய போலீஸ் ரோந்து இல்லாத நிலையில் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் தங்களது பொருட்களை இழக்கும் நிலை தொடர்கிறது. தீபாவளி பண்டிகை நெருங்குவதால் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் எண்ணற்ற பேர் இ்ங்கு வருகின்றனர். அவ்வாறு வருபவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொடுத்தால் அச்சம் இன்றி பட்டாசுகளை வாங்கி செல்வார்கள். மேலும் அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் சிவகாசி பஸ் நிலையத்துக்கு தேவையான வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும் என்றும், பஸ் நிலையம் வரும் பெண் பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க தேவையான நடவடிக்கையை மாவட்ட போலீஸ் நிர்வாகம் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து குடும்ப தலைவி சிங்கராணி கூறியதாவது:-பஸ் நிலையத்தில் இலவச கழிவறை பல மாதங்களாக கட்டுமான பணியிலேயே இருக்கிறது. இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பொதுமக்கள் கட்டண கழிவறையை நாட வேண்டிய நிலை உள்ளது. இந்த கட்டிடமும் முற்றிலும் சேதமடைந்த நிலையில் உள்ளது.

இதனால் பெண்கள் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகிறார்கள். இந்த கழிவறையில் இருந்து வெளியேறும் கழிவுகள் நேரடியாக அருகில் உள்ள வாருகாலில் செல்வதால் பஸ் நிலையம் முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.

தொழிலாளி முஸ்தபா:- பஸ் நிலையத்துக்கு இரவு நேரங்களில் வரும் பயணிகளை குறி வைத்து சில திருடர்கள் பஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இவர்கள் அப்பாவி பொதுமக்களின் உடமைகளை திருடி செல்கிறார்கள்.அதேபோல் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட வணிக வளாகத்தின் அருகிலும், புதிய கட்டிடத்திலும் சிலர் இரவு நேரங்களில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள். பல நேரங்களில் பஸ் நிலையத்தை சிலர் திறந்தவெளி பாராக பயன்படுத்துகிறார்கள். எனவே சிவகாசி பஸ்நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்