< Back
மாநில செய்திகள்
வெறும் 4 ஆண்டுகளிலேயே மூடுவிழா கண்ட பாடி ரெயில் நிலையம் மீண்டும் உயிர்ப்பெறுமா?
சென்னை
மாநில செய்திகள்

வெறும் 4 ஆண்டுகளிலேயே மூடுவிழா கண்ட 'பாடி' ரெயில் நிலையம் மீண்டும் உயிர்ப்பெறுமா?

தினத்தந்தி
|
23 Oct 2022 2:05 PM IST

வெறும் 4 ஆண்டுகளிலேயே மூடுவிழா கண்ட ‘பாடி' ரெயில் நிலையத்தில் மீண்டும் ரெயில் சேவைகளை தொடங்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

'மியாவாக்கி' காடுகள்

பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எப்.) வடிவமைக்கப்பட்ட புதிய ரெயில் பெட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, சென்னை பாடி மற்றும் அண்ணாநகர் பகுதிகளில் பரவி கிடந்த 3.09 கி.மீ. நீள வழித்தடம், கடந்த 2003-ம் ஆண்டு ரூ.7.3 கோடி செலவில் பயணிகள் ரெயிலுக்கான வழித்தடமாக மாற்றப்பட்டது. வெறும் 5 மாதங்களில், அந்த வழித்தடத்தில் இருந்த 13 பாலங்கள் புதுப்பிக்கப்பட்டு, சென்னை புறநகர் மின்சார ரெயில் வழித்தட வரைபடத்தில், பாடி மற்றும் அண்ணாநகர் மேற்கு ஆகிய 2 ரெயில் நிலையங்கள் என்ட்ரீ கொடுத்தன. அப்போது மத்திய ரெயில்வே இணை மந்திரியாக இருந்த தமிழகத்தை சேர்ந்த ஏ.கே.மூர்த்தி இந்த வழித்தடத்தை திறந்து வைத்தார்.

சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து அண்ணாநகர் மேற்கு வரை, நாள் ஒன்றுக்கு 5 மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட்டன. எவ்வளவு வேகமாக உருவாகியதோ, அவ்வளவு வேகத்தில் பாடி மற்றும் அண்ணாநகர் மேற்கு ஆகிய ரெயில் நிலையங்கள் 'கோமா' நிலைக்கு தள்ளப்பட்டன. பாடி சந்திப்பில் கட்டப்பட்ட புதிய மேம்பால பணிகளுக்காக 2 ரெயில் நிலையங்களும் 2007-ம் ஆண்டு மூடப்பட்டன. மூடப்பட்ட அந்த 2 ரெயில் நிலையங்களும் தற்போது புதர் மண்டி 'மியாவாக்கி' காடுகள் போல காட்சி தருகின்றன. புதிதாக வடிவமைக்கப்பட்ட ரெயில் பெட்டிகளை இயக்கி சோதனை செய்வதற்கும், உதிரி பாகங்களை கொண்டு செல்வதற்கும் அந்த தண்டவாளங்களை ஐ.சி.எப். தற்போது பயன்படுத்தி வருகிறது.

ரெயில் சேவை தேவை

பாடி மற்றும் அண்ணாநகர் மேற்கு ஆகிய ரெயில் நிலையங்கள் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுவதால், கஞ்சா புகைப்பதற்கு, மது அருந்துவதற்கு என சமூகவிரோத செயல்களின் கூடாரமாக திகழ்ந்து வருகிறது. மாடுகள் கட்டி வைப்பதற்கும், கழிப்பிடமாகவும் சிலர் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில் இருக்கிறது. டிக்கெட் கொடுக்கும் அறை வார்த்தைகளால் விவரிக்கமுடியாத அளவுக்கு அலங்கோலமாக காட்சி தருகிறது.

திறப்பு விழா கண்டு வெறும் 4 ஆண்டுகளிலே மூடுவிழா கண்ட பாடி ரெயில் நிலையம் மீண்டும் உயிர்ப்பெறுமா?, அண்ணாநகர் மேற்கு ரெயில் நிலையத்தில் இருந்து மீண்டும் சிக்கு, புக்கு ரெயிலின் சத்தம் கேட்குமா? என்பதே அந்த பகுதிவாசிகளின் தீராத ஏக்கமாக இருக்கிறது. ரெயில் நிறுத்தப்பட்ட காலத்தில் அந்த பகுதிகள் போதுமான வளர்ச்சியை அடையவில்லை. ஆனால் இப்போது, குடியிருப்பு பகுதிகள் நிறைந்து சென்னையின் அடையாளங்களில் ஒன்றாகவே மாறிவிட்டன. அதனால் இன்றைய சூழலில் ரெயில் சேவை அந்த பகுதிக்கு தேவை என்ற நிலை வந்துவிட்டது.

அலங்கோலம்

இதுகுறித்து பாடியை சேர்ந்த மாணவர் ராகுல்:-

நான் தற்போது 11-ம் வகுப்பு படித்து வருகிறேன். இன்னும் 2 வருடத்தில் மேல்படிப்புக்கு செல்லவேண்டும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள ஏதாவது கல்லூரிகளில் இடம் கிடைத்தால் போக்குவரத்து தேவைக்கு சிரமத்தை சந்திக்க நேரிடும். என்னைப்போன்று ஏராளமான மாணவர்கள் இருக்கிறார்கள். எனவே முன்பு இருந்ததை போல பாடி ரெயில் நிலையத்தில் மீண்டும் ரெயில் சேவைகளை தொடங்கவேண்டும். அவ்வாறு செய்தால், நாங்களும் நகரின் பல்வேறு இடங்களுக்கு சென்றுவருவதற்கு எளிதாக இருக்கும்.

சத்தியா நகரை சேர்ந்த குடும்ப தலைவி செல்வி:-

மின்சார ரெயில்கள் பாடி ரெயில் நிலையத்துக்கு இயக்கப்பட்டபோது, போக்குவரத்துக்கு நல்ல வசதியாக இருந்தது. ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்ட பிறகு ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு செல்வதற்காக பஸ் சேவையை நம்பி இருக்கின்றோம். எனவே மீண்டும் ரெயில் சேவைகளை இயக்கினால் மக்களுக்கு சவுகரியமாக இருக்கும். திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையத்தோடு பாடி ரெயில் நிலையத்தை இணைத்தால், நகரின் எந்த பகுதிக்கும் எளிதாக சென்றுவிடலாம். ரெயில் சேவைகள் இயக்கப்படாததால் பாடி ரெயில் நிலையம் சுத்தம், சுகாதாரம் இன்றி அலங்கோலமாக காட்சி அளிக்கிறது. எனவே சீக்கிரமாக பாடி ரெயில் நிலையத்தை புனரமைத்து, ரெயில் சேவைகளை இயக்கவேண்டும்.

பூங்கா அமைத்து...

வில்லிவாக்கம் வன்னியர் தெருவை சேர்ந்த மாணவர் தருண்:-

பாடி ரெயில் நிலையம் முன்பு செயல்பாட்டில் இருந்திருக்கிறது என்பதை அங்கு இருந்த தண்டவாளத்தை பார்த்து தெரிந்துகொள்ளமுடிகிறது. அதில் மின்சார ரெயில்கள் செல்வதை நான் பார்த்தது இல்லை. ரெயில் நிலையம் அருகே நவீன வசதிகளுடன் புதிதாக பூங்கா வர இருக்கிறது. எனவே அந்த ரெயில் நிலையத்தை மேம்படுத்தி, ரெயில்களை இயக்கினால் நகரின் எந்தவொரு பகுதியில் இருந்தும் பயணிகள் வருவதற்கு எளிதாக இருக்கும். இதனை ரெயில்வே நிர்வாகம் உடனடியாக செய்யவேண்டும்.

வில்லிவாக்கத்தை சேர்ந்த தனியார் கம்பெனி ஊழியர் கவிதா:-

பாடி ரெயில் நிலையம் இருந்ததற்கான தடயமே இல்லாத அளவுக்கு சிதைந்த நிலையில் காட்சியளிக்கிறது. பாடி ரெயில் நிலையம் செயல்பாட்டில் இருந்தால், நாங்கள் போக்குவரத்து தேவைகளுக்காக கஷ்டப்படும் நிலை இருக்காது. சுத்தம் இல்லாமல் சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்தும் வகையில் இப்போது காட்சி தருகிறது. இதனை சீராக்கி, முன்பு போன்று ரெயில்களை இயக்கினால் நன்றாக இருக்கும். என்னை போன்று நிறையபேர் பயன்அடைவார்கள். ரெயில்களை இயக்கவில்லை என்றால் கூட, அங்கு மக்கள் பயன்பெறும் வகையில் நவீன வசதிகளுடன் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் பூங்கா அமைத்தாவது பராமரிக்கலாம்.

ரெயில்வே என்ன சொல்கிறது?

பாடி மற்றும் அண்ணாநகர் மேற்கு ரெயில் நிலையம் மூடப்பட்டதற்கான காரணம் குறித்து தெற்கு ரெயில்வே மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

புதிதாக ஒரு வழித்தடத்தில் மின்சார ரெயில்களை இயக்கினால், கணிசமான அளவுக்கு பயணிகள் அதில் பயன்பெறுவதாக இருக்கவேண்டும். ஆனால் சென்னை கடற்கரையில் இருந்து பாடி, அண்ணாநகர் மேற்கு ரெயில் நிலையம் வரை இயக்கப்பட்ட மின்சார ரெயில் சேவைகள் பயணிகளிடம் போதுமான வரவேற்பினை பெறவில்லை. மிகவும் குறைவான பயணிகளே அந்த வழித்தடத்தில் பயணம் செய்தனர். ரெயில்வே லாபநோக்கற்ற பொது நிறுவனம் என்றால் கூட, கடுமையான நஷ்டம் ஏற்பட்டது.

அதனால், அந்த வழித்தடத்தில் ரெயில் சேவைகளை நிறுத்திவிட்டோம். புதிய ரெயில் பெட்டிகளை அந்த வழித்தடத்தில் இயக்கி பார்ப்பதற்கான தடமாக ஐ.சி.எப். பயன்படுத்தி வருகிறது. தற்போதைய நிலையில் அந்த வழித்தடத்தில் மீண்டும் ரெயில் சேவைகளை தொடங்குவதற்கான திட்டம் எதுவும் தெற்கு ரெயில்வேயிடம் இல்லை. ரெயில்வே வாரியத்திடம் இருந்து உத்தரவுகள் வந்தால் மட்டுமே, அடுத்தக்கட்ட நகர்வுகளை நோக்கி செல்லமுடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்