ஏ.ஐ. தொழில்நுட்பம் ஆசிரியர்களின் வேலையை பறிக்குமா? - கவர்னர் ஆர்.என்.ரவி பதில்
|மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு ஆசிரியர்களின் பங்களிப்பு நிச்சயம் தேவை என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
சென்னை,
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் 'எண்ணித் துணிக' என்ற தலைப்பில் கல்வியாளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் கலந்துரையாடிய கவர்னர் ஆர்.என்.ரவி, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு(ஏ.ஐ.) தொழில்நுட்பம் ஆசிரியர்களின் வேலையை பறிக்குமா? என்று ஆசிரியை ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த கவர்னர் ஆர்.என்.ரவி, தொழில்நுட்பங்கள் எந்த அளவிற்கு வளர்ந்தாலும், ஆசிரியர்களின் கற்பித்தலுக்கு இணையாகாது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஆசிரியர்கள் உடல் அளவிலும், மனதளவிலும் மட்டுமின்றி, உணர்ச்சிப்பூர்வமாகவும் மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கிறார்கள். மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு ஆசிரியர்களின் பங்களிப்பு நிச்சயம் தேவை. இதை எந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தாலும் செய்ய முடியாது. எனவே ஆசிரியர்கள் இது குறித்து கவலைப்படத் தேவையில்லை" என்று தெரிவித்தார்.