பெரம்பலூர்
வேப்பந்தட்டையில் கூடுதலாக ஒரு வங்கி அமைக்க கோரிக்கை
|வேப்பந்தட்டையில் கூடுதலாக ஒரு வங்கி அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வேப்பந்தட்டை:
தேசியமயமாக்கப்பட்ட வங்கி
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தாலுகாவாக மாறியது. தாலுகா தலைமை இடமான இங்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்று உள்ளது. இந்த வங்கியையே அருகில் உள்ள அன்னமங்கலம், அரசலூர், விசுவக்குடி, முகமதுபட்டிணம், பிள்ளையார்பாளையம், பூம்புகார், பூஞ்சோலை, தொண்டப்பாடி, பாளையூர், வெண்பாவூர், பெரியவடகரை, மாவிலிங்கை, பாண்டகப்பாடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
10-க்கும் மேற்பட்ட ஊர்களை சேர்ந்த பொதுமக்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் (100 நாள் வேலை) வேலை செய்யும் தொழிலாளர்கள் அனைவரும் வேப்பந்தட்டையில் உள்ள இந்த வங்கியில்தான் கணக்கு வைத்துள்ளனர்.
பல மணி நேரம் காத்திருப்பு
மேலும் இந்த கிராமங்களை சேர்ந்தவர்களில் வெளிநாடுகளில் உள்ளவர்கள் இந்த வங்கியில் என்.ஆர்.ஐ. கணக்குகளை வைத்துள்ளனர். இதன்படி அந்த வங்கியில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கணக்குகள் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த வங்கியில் பணம் போடுவதற்கு சென்றாலும், பணம் எடுப்பதற்கு சென்றாலும் வாடிக்கையாளர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
எனவே வேப்பந்தட்டையில் மற்றொரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியோ அல்லது தனியார் வங்கியோ அமைக்கப்பட வேண்டும் என்று வியாபாரிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்த அவர்களது கருத்துகள் வருமாறு:-
கால விரயம்
வணிகர் நலச்சங்க கவுரவ தலைவர் கந்தசாமி:- ஒரே வங்கிக்கு அதிகப்படியான வாடிக்கையாளர்கள் சென்று வருவதால் கால விரயம் ஏற்படுகிறது. மேலும் வியாபாரிகள் 10, 20, 50, 100 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிக்கு சென்று வந்தால், பல மணி நேரமாகி விடுகிறது. மேலும் சேமிப்பு கணக்குகளை வைத்துக் கொள்ளவும் சிரமம் ஏற்படுகிறது. வேப்பந்தட்டையில் கூடுதலாக ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியோ அல்லது தனியார் வங்கியோ அமைத்தால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த பயனடைவார்கள். எனவே வேப்பந்தட்டையில் கூடுதலாக ஒரு வங்கி கிளையை அமைத்து தர வேண்டும்.
மிகுந்த சிரமம்
வேப்பந்தட்டையை சேர்ந்த அழகுவேல்:- இங்கு சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்று தொடங்கப்பட்டது. அதன் பிறகு வேப்பந்தட்டை தாலுகாவாக மாற்றப்பட்டு, பல்வேறு வளர்ச்சி கண்டுள்ள நிலையில் ஒரே ஒரு வங்கி சேவை மட்டும் இருப்பது, பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒரு வங்கியில் 40 ஆயிரத்திற்கும் மேல் வாடிக்கையாளர்கள் இருப்பதால் வாடிக்கையாளர்களின் தனித்தன்மை அறிந்து கடன் கொடுப்பதிலும், வசூல் செய்வதிலும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதனால் கடன் வாங்குவதற்கு தகுதியான பலரும், கடன் வாங்க முடியாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே கூடுதலாக ஒரு வங்கியை வேப்பந்தட்டையில் ஏற்படுத்தினால் வாடிக்கையாளர்கள் பரவலாகி எளிதாக பணம் போடுவதற்கும், எடுப்பதற்கும் வசதியாக இருக்கும். எனவே இதற்கான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.
கடன் பெற முடியாமல் தவிப்பு
பாலையூரை சேர்ந்த விவசாயி சின்னசாமி:- மாவட்ட தலைநகரான பெரம்பலூரில் 10-க்கும் மேற்பட்ட வங்கிகள் உள்ளன. இந்த வங்கிகளில் ஏதாவது ஒரு கிளையை வேப்பந்தட்டையில் அமைத்தால் பொதுமக்கள் வங்கிக்கு சென்று வரும் நேரம் குறைந்துவிடும். பணம் அனுப்புவதற்கும், கணக்கில் வரவு வைப்பதற்கும் நேரம் மிச்சப்படும். மேலும் வேப்பந்தட்டையில் ஒரே ஒரு வங்கி இருப்பதனால் பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தின் மூலம் பெரும்பாலான விவசாயிகள் கடன் வாங்க முடியாமல் தவிக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து வேப்பந்தட்டையில் கூடுதலாக ஒரு வங்கி கிளையை அமைக்க வேண்டும்.
கூடுதலாக வங்கி கிளை
மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த கவிதா:- சுய உதவிக் குழுக்கள் மூலம் வசூல் செய்யப்படும் சேமிப்பு தொகையை வங்கியில் சென்று செலுத்துவதற்கு நீண்ட நேரம் ஆகிவிடுகிறது. அதேபோல் பணம் எடுப்பதற்கு சென்றாலும் கூட்டம் அதிகமாக இருப்பதால் பல மணி நேரம் செலவாகிறது. எனவே மகளிர், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வேப்பந்தட்டையில் கூடுதலாக ஒரு வங்கி கிளையை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.