ஐகோர்ட்டில் நடிகை விஜயலட்சுமி இன்று ஆஜராவாரா?
|சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி போலீசில் புகார் அளித்தார்.
சென்னை,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இவர் மீது நடிகை விஜயலட்சுமி பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி போலீசில் புகார் செய்தார். இதன்படி சீமான் மீது கடந்த ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் சீமான் மனு தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, நடிகை விஜயலட்சுமியை நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.
ஆனால், அந்த மனு விசாரணையில் இருக்கும்போது, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஐகோர்ட்டு மதுரை கிளைக்கு சென்றுவிட்டார். இந்தநிலையில், சீமான் மனுவை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்ற முறையீட்டின் அடிப்படையில், இந்த மனு இன்று (செவ்வாய்க்கிழமை) நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அதனால், பழைய உத்தரவின்படி விஜயலட்சுமி இன்று ஆஜராவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.