சென்னை
சென்னையில் ஆக்கிரமிப்பால் காணாமல் போகும் நடைபாதைகள் நடவடிக்கை எடுக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
|சென்னை மாநகரில் மக்கள் வசதிக்காக மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ‘ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் புதிய, புதிய திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன.
மக்கள் நெரிசல் அதிகம் உள்ள பகுதிகள், வணிக வளாகங்கள் உள்ள இடங்களில் நடைபாதை வசதிகள் செய்து தரப்படுகின்றன. ஆனால் அந்த நடைபாதைகளை ஆக்கிரமிக்கும் போக்கு தொடர்வதால் பாதசாரிகள் அவதிப்படுகிறார்கள்.
நடைபாதை நடப்பதற்கே...
நடைபாதை நடப்பதற்கே என்று மாநகராட்சி சார்பில் வாசகம் தாங்கிய பலகை வைக்கப்பட்டு இருந்தாலும், அதனை ஒரு பொருட்டாக எண்ணாமல், பலர் பாதைகளில் கடைகளை அமைப்பது, சொந்த இடம் போல் வாகனங்களை நிறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதைப் பார்க்க முடிகிறது.
இடப்பற்றாக்குறை காரணமாக கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களை வீடுகளில் நிறுத்த முடியாமல், வீட்டு முன்பு உள்ள சாலைகளிலும், அதனை ஒட்டியும் நிறுத்தி விடுகிறார்கள்.
பிரதான சாலைகளில் மட்டுமல்ல, உள் புறச்சாலைகளிலும் இதே நிலைதான் தொடர்கிறது. இதனால் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்களும் ஏற்படுகின்றன.
உதாரணமாக சென்னை எழும்பூர், மந்தைவெளி, திருவான்மியூர், லயோலா கல்லூரி அருகில் என சொல்லிக்கொண்டே போகலாம். இதைவிட வட சென்னையில் சொல்லவே தேவையில்லை. அங்கே நடைபாதையைத் தேடத்தான் வேண்டும்.
இது ஒரு புறம் இருக்க, சில நடைபாதைகள் நடக்க முடியாத அளவில் சேதம் அடைந்து காணப்படுகின்றன. அதனையும் மாநகராட்சி சீர்செய்து கொடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பால் காணாமல் போன நடைபாதைகளையும் மீட்டுத் தரவேண்டும். அடிக்கடி அதிரடி நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் ஆக்கிரமிப்புகள் தடுக்கப்பட வேண்டும்.
இதுதொடர்பாக பொதுமக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.
தடுக்க வேண்டும்
வில்லிவாக்கத்தை சேர்ந்த பாபு கூறும்போது, 'சென்னையில் பல இடங்களில் நடை பாதைகளை அழகுப்படுத்தி இருக்கின்றனர். அதில் மக்கள் எளிதாகக் கடந்து செல்கின்றனர். ஆனால் சில இடங்களில் நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கின்றன. சில இடங்களில் கடைகளாகவும், வாகனம் நிறுத்தும் இடங்களாகவும் நடைபாதைகள் மாறி இருப்பது, பார்ப்பதற்கு வேதனையாக இருக்கிறது. இவ்வாறு நடை பாதைகளை தனிநபர்கள் ஆக்கிரமிப்பதை அரசு தடுக்கவேண்டும். பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அதனைக் கொண்டு வரவேண்டும்' என்றார்.
அபராதம் விதிக்கலாம்
மதுரவாயலை சேர்ந்த பேராசிரியை ஷோபனா ரமேஷ்காந்தன் கூறுகையில், 'நடைபாதைகளில் ஆக்கிரமிப்புகள் பொது மக்களுக்கு இடைஞ்சல் தரக்கூடியதாகவே இருக்கின்றன. ஏற்கனவே சென்னையில் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது. இதில் நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டு, பொது மக்கள் சாலையில் நடப்பதால், மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஏதோ பிழைப்புக்காக கடைகள் வைத்தால்கூட பரவாயில்லை. வீடுகளில் நிறுத்தப்படவேண்டிய கார், மோட்டார் சைக்கிள்களை நடைபாதையில் நிறுத்துவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். அவ்வாறு நிறுத்துபவர்களுக்கு அபராதம் விதிப்பது சரியான நடவடிக்கையாக இருக்கும்' என்றார்.
வேடிக்கை பார்க்கிறார்கள்
துறைமுகம் பகுதியை சேர்ந்த சந்தான லட்சுமி நாராயணன் கூறும்போது, 'துறைமுகம் பகுதியில் பெரும்பாலான நடைபாதைகள் ஆக்கிரமிப்பில்தான் இருக்கின்றன. இதில் கடை வைப்பவர்கள் மாமூல் கொடுத்து வருவதாகச் சொல்கிறார்கள். அதேபோல், வாகனத்தை நிறுத்தக்கூடாது என்று போட்டு இருக்கும் இடங்களில் வாகனங்களை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். நடைபாதையையொட்டிய கடைகள் முன்பு சிலர் வாகனங்கள் நிறுத்திச் செல்வதை தட்டிக்கேட்டால், அவர்களை மிரட்டுகிறார்கள். அதிலும் பர்மா பஜாரில் நடைபாதையே தெரியாத வகையில் அங்குள்ள கடைகள் ஆக்கிரமித்து இருக்கின்றன. இதையெல்லாம் தட்டிக்கேட்க வேண்டிய அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லாமல் வேடிக்கை பார்க்கிறார்கள்' என்றார்.
யார் அனுமதி கொடுத்தது?
சென்னை திருமங்கலத்தை சேர்ந்த வக்கீல் நதியா சீனிவாசன் கூறுகையில், 'திருமங்கலம் 100 அடி சாலைப் பகுதியில் நடைபாதைகளில் கரும்பு ஜூஸ் கடை உள்பட பல கடைகள் அமைக்கப்பட்டு, பொது மக்கள் நடந்து செல்வதற்கு வழி இல்லாமல் இருக்கிறது. இதுமட்டும் அல்லாமல், சிறுநீர் கழிப்பது போன்ற அநாகரிகமான செயல்களும் நடைபாதையில்தான் நடக்கிறது. இதேபோல், சென்னையில் பெரும்பாலான நடைபாதைகளில் கார், பைக்குகள்தான் அலங்கரித்து இருக்கின்றன. நடைபாதைகள் நடந்து செல்வதற்காக அமைக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் அவர்கள் வண்டியை நிறுத்துவதற்கு யார் அனுமதி கொடுத்தது? நடைபாதையில் நடக்க முடியாமல், சாலையில் இறங்கி நடக்கும் போது, எதிர்பாராத விபத்துகளும் ஏற்படுகின்றன. இதையெல்லாம் தடுத்து நிறுத்த வேண்டும். நடைபாதைகள் நடப்பதற்கே என்பதை உறுதிசெய்யவேண்டும்' என்றார்.
கண்டிக்கத்தக்கது
புரசைவாக்கத்தை சேர்ந்த ஜெ.சந்திரசேகர் கூறும்போது, 'நடைபாதையில் கடைகள் அமைப்பது, வாகனங்களை நிறுத்துவது என்பது தவறான விஷயம். இது பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. இதற்கு நிரந்தர நடவடிக்கை எடுத்தாக வேண்டும். குறிப்பாக பள்ளிகளுக்கு அருகில் இருக்கும் நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்படுவதுதான் வேதனையான விஷயமாக இருக்கிறது. சிலர் தங்கள் கடையின் முகப்பை நடைபாதை வரை நீட்டி, தங்கள் இடங்கள் போல கருதுகிறார்கள். இதனால் பாதசாரிகள் மெயின்ரோட்டில் நடந்து செல்கிறார்கள். இதேபோல், வாகனங்களையும் அதன் உரிமையாளர்கள் நடைபாதையில் நிறுத்தி செல்லும் வழக்கமும், கண்டிக்கத்தக்கது. இதை உடனடியாக சரிசெய்யவேண்டும்' என்றார்.