திருவாரூர்
ஆபத்தான வளைவில் அகலமான தரைப்பாலம் கட்டப்படுமா?
|ஆபத்தான வளைவில் அகலமான தரைப்பாலம் கட்டப்படுமா?
கூத்தாநல்லூர் அருகே ஆபத்தான வளைவில் அகலமான தரைப்பாலம் கட்ட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தரைப்பாலம் சேதம்
கூத்தாநல்லூரில் இருந்து வடபாதிமங்கலம் செல்லும் சாலையின் இடையில் காடுவெட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தையொட்டிய சாலையோரத்தில் நாகங்குடி பாசன வாய்க்கால் செல்வதால் வெண்ணாற்றில் இருந்து வரும் தண்ணீரை பாசன வாய்க்கால் மூலம் அந்த பகுதியில் உள்ள விவசாய வயல்களுக்கு கொண்டு செல்வதற்கு ஏதுவாக சாலையின் குறுக்கே குழாய்கள் பதிக்கப்பட்டு மேல்பகுதியில் தரைப்பாலம் கட்டப்பட்டது.
இந்தநிலையில் தரைப்பாலத்தின் 2 பக்கமும் உள்ள தடுப்பு சுவர் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. இதில் ஒரு பக்கம் உள்ள தடுப்பு சுவர் இடிந்து விழுந்து பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டது. மேலும் தரைப்பாலத்தின் உள்பகுதியிலும் சேதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்துடன் இந்த சாலையில் சென்று வருகின்றனர். சேதமடைந்த தரைப்பாலம் உள்ள இடம் ஆபத்தான வளைவு என்பதால், வளைவை நேராக்கும் வகையில் அகலமான புதிய தரைப்பாலம் கட்டித்தர வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
பழமையான குறுகலான பாலம்
இதுகுறித்து கூத்தாநல்லூரை சேர்ந்த காளிதாஸ் கூறுகையில், கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம் சாலை போக்குவரத்து மிகுந்த சாலை என்பதால், இந்த சாலையில் அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி கல்லூரி வாகனங்கள், கனரக வாகனங்கள் உள்பட ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. காடுவெட்டி என்ற இடத்தில் சாலையின் குறுக்கே அமைக்கப்பட்ட தரைப்பாலம் மிகவும் பழமையான குறுகலான பாலம்.
இந்த பாலமும் குறுகலாக இருப்பதாலும், ஆபத்தான வளைவு என்பதாலும் வாகனங்களை வளைத்து திருப்பி ஓட்டிச்சென்று வருவதில் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். அதனால் வாகனங்கள் சிரமமின்றி சென்று வருவதற்கு ஏதுவாக அகலமான தரைப்பாலம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
சாலையோரத்தில் பள்ளம்
கூத்தாநல்லூரைச்சேர்ந்த நூர்முகமது கூறுகையில், காடுவெட்டியில் பாசன வாய்க்கால் வசதிக்காக சாலையின் குறுக்கே அமைக்கப்பட்ட தரைப்பாலம், அதன் பலம் குறைந்தே காணப்படுகிறது. அதனால் தான் தடுப்பு சுவர்கள் இடிந்து விழுந்து சாலையோரத்தில் பள்ளம் ஏற்பட்டது.
இதனால், பகல் நேரங்களை காட்டிலும் இரவு நேரங்களில் வாகனங்களை ஓட்டிச்சென்று வருவதற்கு வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றன. அதிலும் வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் ஆபத்தான வளைவில் திரும்புவதற்கு நிலைதடுமாறுகின்றன. மேலும் கனரக வாகனங்களும் வளைவில் திரும்புவதற்கு சிரமம் அடைகின்றன. அதனால், ஆபத்தான வளைவில் அகலமான புதிய தரைப்பாலம் கட்டித்தர வேண்டும் என்றார்்.