ஈரோடு
பர்கூர் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்ட 2-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் தடுப்பு சுவர் அமைக்கப்படுமா?
|பர்கூர் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்ட 2-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
அந்தியூர்
பர்கூர் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்ட 2-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
2-வது கொண்டை ஊசி வளைவு
அந்தியூரில் இருந்து பர்கூர் வழியாக கர்நாடக மாநிலம் மைசூருக்கு செல்லக்கூடிய மலைப்பாதையில் 2-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு மலைப்பகுதியில் கனமழை பெய்தது. அப்போது மலைப்பாதையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு சுவர் மழைநீரால் அடித்து செல்லப்பட்டது. இதை சரி செய்வதற்காக தடுப்பு சுவர் அமைக்கப்பட்டிருந்த இடத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டது. மணல் மூட்டை வைக்கப்பட்டு உள்ள பகுதி குறுகலான ஆபத்தான வளைவு பகுதி ஆகும்.
1,500 அடி பள்ளம்
இந்த மலைப்பாதை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் தமிழ்நாட்டில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கும், கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கும் சென்று வருகின்றன. இரவு நேரங்களில் திம்பம் மலைப்பாதையில் செல்ல வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் சரக்கு வாகனங்கள் அதிக அளவில் பர்கூர் மலைப்பகுதி வழியாக சென்று வருகின்றன. கவனக்குறைவாக வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்டினால் 1,500 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே பர்கூர் மலைப்பாதையில் ஆபத்தான முறையில் உள்ள 2 கொண்டை ஊசி வளைவு பகுதியில் தடுப்பு சுவர் அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறிய கருத்துகள் வருமாறு:-
தடுப்பு சுவர்
அந்தியூரை சேர்ந்த கேசவராஜ்:-
அந்தியூரில் இருந்து மைசூருக்கு அடிக்கடி சென்று வரக்கூடிய வாகனங்கள் அந்த இடத்தில் திரும்ப முடியாமல் நின்று விடுகிறது.
மாற்று பாதை இல்லாததால் இரவு முழுவதும் அதே இடத்தில் பஸ் பயணிகள் மற்றும் சரக்கு வாகன ஓட்டுனர்கள் நடுக்காட்டில் காத்துக் கொண்டிருக்க வேண்டிய நிலைமை உள்ளது. எனவே பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மின் விளக்கு
அந்தியூரை சேர்ந்த எஸ்.ஜி.சண்முகானந்தம்:-
மிகவும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கக்கூடிய பர்கூர் மலைப்பாதையில் மழையால் மண் சரிவு ஏற்பட்டு ஓராண்டுக்கு மேல் ஆகியும் தடுப்பு சுவர் அமைக்க அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பெரிய விபத்து ஏற்பட்டு அசம்பாவிதம் நிகழும் முன்பு தடுப்பு சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மலைப்பாதையில் வனவிலங்குகளின் நடமாட்டம் உள்ளது. இந்த வனவிலங்குகளால் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மலைப்பாதையில் மின் விளக்குகள் அமைக்க வேண்டும்.
அகலப்படுத்தி...
பர்கூரை சேர்ந்த ஒன்றியக்குழு கவுன்சிலர் ராயணன்:-
பர்கூர் மலைப்பகுதியில் 33 மலைக்கிராமங்கள் உள்ளன அவர்களுக்கு தேவையான மிகவும் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக அந்தியூர் வர வேண்டி உள்ளது. மேலும் மருத்துவ சிகிச்சைக்காகவும், உணவுப்பொருட்கள் வாங்குவதற்காகவும் அடிக்கடி வந்து செல்ல வேண்டிய நிலைமையில் மலைவாழ் மக்கள் உள்ளனர்.
இந்த நிலையில் பர்கூர் மலைப்பாதையின் 2-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் அடிக்கடி வாகனங்கள் பழுது ஏற்பட்டு நின்று விடுகின்றன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே 2-வது கொண்டை ஊசி வளைவு பகுதியை அகலப்படுத்தி ரோட்டோரம் தடுப்பு சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிழற்குடை
அந்தியூர் தவுட்டுப்பாளையத்தை சேர்ந்த தொழில் அதிபர் சன்ரைஸ் சிவக்குமார்:-
அந்தியூரில் இருந்து பர்கூர் மலைப்பாதை வழியாக கர்நாடக மாநிலம் மைசூருக்கு சுற்றுலா வாகனங்கள், சரக்கு வாகனங்கள் உள்பட பல்வேறு வாகனங்கள் இரவு, பகலாக சென்று வருகின்றன. இங்குள்ள 2-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் வாகனங்கள் பழுது ஏற்பட்டு திரும்ப முடியால் நின்று விடுவதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்படுகிறது. இதனால் குறித்த நேரத்தில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல முடிவது இல்லை. எனவே பொது மக்களின் நலன் கருதி 2-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு உள்ள இடத்தில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும். மேலும் மலைப்பாதையில் தொடர்ந்து 30 கிலோ மீட்டர் தூரத்துக்கு இரு சக்கர வாகனங்களில் செல்வோர் ஒதுங்கி நின்று செல்ல நிழற்குடை இடம் இல்லை. இதனால் மழைக்காலங்களில் இரு சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பர்கூர் மலைப்பகுதியில் நிழற்குடை அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.