< Back
மாநில செய்திகள்
நடைபாலத்தின் முகப்பில் தடுப்பு சுவர் கட்டப்படுமா?
திருவாரூர்
மாநில செய்திகள்

நடைபாலத்தின் முகப்பில் தடுப்பு சுவர் கட்டப்படுமா?

தினத்தந்தி
|
30 Jun 2023 12:15 AM IST

கூத்தாநல்லூர் அருகே நடைபாலத்தின் முகப்பில் தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடைபாலம்

கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலத்தில் அரிச்சந்திரபுரம் கடைவீதிக்கும், உச்சுவாடி கிராமத்திற்கும் இடையே வெண்ணாற்றின் குறுக்கே நடைபாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலத்தினை வடபாதிமங்கலம், அரிச்சந்திரபுரம், உச்சுவாடி, மன்னஞ்சி, பெரியகொத்தூர், ராமநாதபுரம், சேந்தங்குடி, வடவேற்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

அருகாமையில் உள்ள பள்ளிகளுக்கு சென்று வரும் மாணவர்கள், கடைவீதி, பஸ் நிறுத்தம், வழிபாட்டு தலங்கள் மற்றும் ஏனைய இடங்களுக்கு சென்று வரக்கூடிய அந்த பகுதி மக்கள் இந்த பாலத்தையே அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது

இந்த பாலம் சிமெண்டு தரை தளங்கள் மற்றும் தடுப்பு கம்பிகளால் அமைக்கப்பட்ட பாலம் என்பதால் பாலத்தை தாங்கி பிடிக்கும் வகையில், பாலத்தின் முகப்பில் இரண்டு பக்கமும் தடுப்பு சுவர் கட்டப்பட்டது. ஆனால் அந்த தடுப்பு சுவர்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து ஆற்றுக்குள் விழுந்து விட்டது. இதனால் பாலத்தின் முகப்பில் தடுப்பு இல்லாமல் போனதால் அந்தரங்கத்தில் நிற்கும் பாலம் போலவே காணப்படுகிறது.

தடுப்பு சுவருக்கு பதிலாக மூங்கில் கம்புகள் கட்டப்பட்டது. அவையும் தற்போது மடிந்து போய் முறிந்து விழுந்தது. இதனால் பாலத்தின் முகப்பில் மண்சரிவு ஏற்பட்டு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாலத்தின் முகப்பில் கடந்து பாலத்தை அடைந்து சென்று வருவதற்கு அப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மிகவும் அச்சம் அடைந்து வருகின்றனர்.

தடுப்பு சுவர் கட்டித்தர வேண்டும்

மேலும் இரவு நேரங்களில் சென்று வருவோர் பலர் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். தாங்கி பிடிக்க தடுப்பு சுவர் இல்லாததால் ஆற்றில் அதிகளவில் தண்ணீர் செல்லும் போது நடைபாலம் அடித்து செல்லப்படுமோ என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே பாலத்தின் முகப்பில் தடுப்பு சுவர் கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்