கரூர்
நன்செய் புகழூரில் ரூ.406 கோடியில் கட்டப்படும் கதவணை பகுதியில் பூங்கா அமைக்கப்படுமா?
|நன்செய் புகழூரில் ரூ.406 கோடியில் கட்டப்படும் கதவணை பகுதியில் பூங்கா அமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
கதவணை அமைக்கும் பணி
கரூர் மாவட்டம் நன்செய் புகழூர் கிராமத்தில் உள்ள காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.406 கோடியே 50 லட்சம் செலவில் கதவணை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கதவணை கட்டும் பணி ஒப்பந்ததாரர்கள் மூலம் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.நன்செய் புகழூர் காவிரி ஆற்றில் புதிய கதவணை கட்டுவதால் வலது கரை நன்செய் புகழூர் கிராமத்திலும், இடது கரை நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே அனிச்சம்பாளையத்திற்கும் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே வாங்கல் வாய்க்காலில் தலைப்பின் கீழ் அமைக்கப்பட்டு வரும் புதிய கதவணை 1056 மீட்டர் நீளம் கொண்டதாகவும், 73 சட்டர்கள் கதவணை குறுக்கே வைக்கப்பட உள்ளனர். இக்கதவனை அமைப்பதன் மூலம் 0.8 டி.எம்.சி. தண்ணீர் சேமிக்க முடியும். அதேபோல் 4.4 மீட்டர் உயரம் தண்ணீர் தேக்க முடியும்.புதிய கதவணை பணிகள் முடியும்போது வாங்கல் வாய்க்காலின் மூலம் 1458 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.
நிலத்தடி நீர்மட்டம் உயரும்
அதேபோல் நாமக்கல் மாவட்டம் மோகனூர் வாய்க்கால் மூலம் 2583 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். புதிய கதவணையின் மூலம் கரூர் மற்றும் நாமக்கல் மாவட்ட பகுதிகளில் குடிநீர் ஆதாரம் மேம்படுவதோடு நிலத்தடி நீர்மட்டமும் உயரும். அதேபோல் புகழூர் காகித ஆலைக்கு தங்கு தடை இன்றி தண்ணீர் செல்லும் வாய்ப்பு உருவாகும். விவசாயம் சார்ந்த தொழில்கள் மேம்படும்.
கதவணையை சுற்றியுள்ள பகுதி பொதுமக்களுக்கு சுற்றுலாத்தலமாக அமைய வாய்ப்புகள் இருப்பதால் அதனைச் சார்ந்த பொதுமக்களின் பொருளாதாரம் மேம்படும். கரூர் மாவட்டம் நஞ்சை புகழூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள குட்டை, கிணறுகள் கதவணை கட்டி முடிக்கும்போது அதில் உள்ள நீர்மட்டம் மிகவும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் சுமார் 2 ஆண்டுகளாக காவிரி ஆற்றின் குறுக்கே நஞ்சை புகளூர் முதல் அனிச்சம் பாளையம் வரை நெடுகிலும் காவிரி ஆற்றுக்குள் குழிகள் பறித்து கம்பிகள் வைத்து கான்கிரீட் போடப்பட்டுவருகிறது.
பூங்கா அமைக்க வேண்டும்
நன்செய் புகழூர் காவிரி ஆற்றின் குறுக்கே நடைபெறும் கதவணை கட்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கதவணை கட்டி முடிக்கும் போது இந்த பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வர வாய்ப்புள்ளது. திருச்சி மாவட்டம் முக்கொம்பு போல கதவணை உள்ள பகுதிகளில் பூங்கா அமைத்து பூங்காவுக்குள் குழந்தைகள் விளையாடுவதற்கு பல்வேறு வகையான மிருகங்கள், பறவைகளின் சிலைகளும், சருக்கு விளையாட்டு சாதனங்கள், குழந்தைகள், பெரியவர்கள் விளையாடும் விளையாட்டுச் சாதனங்கள், பல்வேறு வகையான பூசெயல்படும் செடிகள் மற்றும் அழகான செடிகளை நட்டு வைத்து சுற்றுலாத்தலமாக இந்த பகுதியை மாற்ற வேண்டும்.
இந்தப் பகுதி பூங்கா உள்ள சுற்றுலாத்தலமாக உருவாக்கப்படும் போது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்களில் பணியாற்றி வரும் அதிகாரிகள் தங்களது குடும்பத்துடன் வந்திருந்து பொழுதை கழித்து செல்வார்கள்.
கோரிக்கை
இதனால் பொதுப்பணித்துறைக்கும் நல்ல வருவாய் கிடைக்க அது ஏதுவாக இருக்கும். சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இங்கு வந்திருந்து கவலைகளை மறந்து தாங்கள் கொண்டு வந்துள்ள உணவு பொருட்களை சாப்பிட்டு மகிழ்ச்சியுடன் செல்ல அது ஏதுவாக இருக்கும்.
எனவே பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் கதவணைப் பகுதியில் நல்ல சிறந்த பூங்காவை அமைத்துத் தர நடவடிக்கை வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.