திருவாரூர்
சேந்தங்குடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படுமா?
|சேந்தங்குடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படுமா?
சேந்தங்குடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேந்தங்குடி கிராமம்
கூத்தாநல்லூர் அருகே சேந்தங்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமம் அமைந்துள்ள பகுதி முற்றிலும் விவசாயத்தை சார்ந்தே உள்ளது. இங்கு ஏராளமான கிராம மக்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் இங்கு வயல் பகுதிகள் அமைந்துள்ள இடங்களிலேயே வீடுகள் உள்ளன. அதனால் அவ்வப்போது வயல் பகுதிகளில் உள்ள பூரான், தேள், பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் கிராமப்புற மக்கள் பலரை கடித்து விடுகின்றன. அப்போது விஷக்கடி ஏற்பட்டவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிப்பதற்கு கூட சேந்தங்குடியில் ஆரம்ப சுகாதார நிலையம் இல்லை.
அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
இதனால் விஷக்கடி ஏற்பட்டவர்களை நீண்ட தூரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய அவலம் உள்ளது. அப்போது சிலர் கொண்டு செல்லும் வழியிலேயே இறந்து விடுகின்றனர். மேலும் சிறு குழந்தைகள், வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் காய்ச்சல், இருமல் போன்ற நோய்களுக்கு கூட முதல் உதவி சிகிச்சை பெற முடியாமல் உள்ளது. இதனால் கிராம மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
எனவே பொதுமக்களின் நலன் கருதி சேந்தங்குடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.