< Back
மாநில செய்திகள்
நாகையில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைக்கப்படுமா?
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

நாகையில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைக்கப்படுமா?

தினத்தந்தி
|
31 Jan 2023 12:15 AM IST

நாகையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைக்கப்படுமா? என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

நாகையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைக்கப்படுமா? என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

நாகை நகரத்தில் சுமார் 1 லட்சத்து 5 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். 35 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மீனவர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் போன்றவர்களே இப்பகுதியில் பெரும்பாலும் வசிக்கின்றனர். நாகை நகர் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இல்லை. அதேவேளையில் தனியார் மேல்நிலைப் பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள் என 10-க்கும் மேல் உள்ளன. நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மட்டுமே உள்ளது.

இப்பகுதியைச் சேர்ந்த மாணவர்கள், மேல்நிலைக் கல்விக்கு அக்கரைபேட்டை, திட்டச்சேரி, ஆழியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பல கிலோ மீட்டர் தூரம் தினமும் சென்று வர வேண்டிய நிலை உள்ளது. அங்குள்ள பள்ளிகளிலும் முதல் கட்டமாக உள்ளூர் மாணவர்கள் சேர்க்கைக்கு பிறகே, மற்ற இடங்களில் இருந்து வரும் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.

கல்வி கட்டணம் கட்டமுடியாமல் அவதி

இதன்காரணமாக வேறு வழியில்லாமல் நாகை நகர் பகுதி மாணவர்கள் தனியார், உதவி பெறும் பள்ளிகளில் படித்து வருகின்றனர். இதனால் ஏழை, எளிய மாணவர்கள் கல்வி கட்டணம் கட்ட முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு கிடைக்காது என்பதால், அரசின் சலுகை கிடைக்காமல் நகரில் உள்ள மாணவர்கள் வேதனையில் உள்ளனர்.

இதனால் நாகை பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களின் மேல்நிலைக் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது. தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சியினரும், வெற்றி பெற்றால் இங்கு அரசு மேல்நிலைப்பள்ளி கொண்டுவர நடவடிக்கை எடுப்போம் என வாக்குறுதி அளிக்கின்றனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாணவர்களின் எதிர்கால நலனைக் கருதி நாகை நகரப்பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பல கிலோமீட்டர் தூரம் செல்கின்றனர்

இதுகுறித்து சமூக ஆர்வலர் வெங்கடேசன் கூறுகையில், ஏழை, எளிய மாணவர்களின் நலனுக்காகவே அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அரசு பள்ளிகளுக்கு ஏராளமான சலுகைகளை தமிழக அரசு அளித்து வருகிறது. இவ்வாறு வழங்கப்படும் சலுகைகளை பெற்று பயனடைய நாகை மாவட்ட தலைநகரில் ஒரு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கூட இல்லாதது வேதனை அளிக்கிறது. பொருளாதாரத்தில் பின் தங்கிய மாவட்டமாக நாகை உள்ளது. அப்படிப்பட்ட நாகையில் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மட்டும் இருப்பதால் மாணவிகள் அதில் பயின்று அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று வருகின்றனர். ஆனால் மாணவர்களுக்கு என அரசு மேல்நிலைப்பள்ளி கிடையாது.

சலுகைகளை பெற முடியாத நிலை

பல்வேறு கிராம பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் உதவி பெறும் பள்ளிகளில் படிக்க வேண்டிய நிலை உள்ளது. ஏழை மாணவர்களால் பல கிலோமீட்டர் தூரம் சென்று அரசு பள்ளியில் படிக்க முடியாது.

மேல்படிப்புக்கு செல்லும் ஏழை மாணவர்கள் தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்த முடியாமல் படிப்பை பாதியில் நிறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் மாணவர்கள் சிறு வயதிலேயே வேலைக்கு செல்வது மற்றும் தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

மாணவர்கள் கல்வி குறித்து அரசு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் மாவட்டத்தின் தலைமை இடத்திலேயே அரசு மேல்நிலைப் பள்ளி இல்லாதது வேதனை அளிக்கிறது. அரசு வேலை உள்ளிட்ட சலுகைகள் அரசு பள்ளியில் படித்தால் தான் கிடைக்கும் என்கிற நிலை தற்போது உள்ளது.அப்படி இருக்க டாக்டர், என்ஜினீயர் உள்ளிட்ட உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும் என்கிற நாகையை சேர்ந்த ஏழை மாணவர்களின் கனவு கானல் நீராகவே போய்விடும் நிலை ஏற்பட்டுள்ளது. நாகை நகராட்சி அலுவலகம் அருகே உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்றார்.

எட்டாக்கனியாகும் மேல்படிப்பு

நாகையை சேர்ந்த சமூக ஆர்வலர் செந்தில்குமார் ராஜு:-

நாகை நகர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட ஏழை மாணவர்கள் உள்ளனர். இவர்கள் 1-ம் வகுப்பில் இருந்து 10-ம் வகுப்பு வரை அரசு பள்ளியிலேயே படித்து வருகின்றனர். அரசின் சலுகைகளை வைத்தே கல்வி பயிலும் நிலையில் இருந்து வருகின்றனர்.

மாவட்டத்தின் தலைமை இடத்தில் அரசு ஆண்கள் பள்ளி இல்லாதது ஏழை மாணவர்கள் 11, 12 -ம் வகுப்பு மேல்படிப்புக்கு விருப்பம் இருந்தும் கட்டணம் கட்ட முடியாமல் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏழை மாணவர்களின் மேல்படிப்பு கல்வி கனவு எட்டாக்கனியாக இருக்கிறது. எனவே நாகையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை அமைத்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்