கரூர்
தொடர் விபத்துகளை தடுக்க தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கப்படுமா?
|புகழூர் அருகே தொடர் விபத்துகளை தடுக்க தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலை
கரூர் மாவட்டம் புகழூர் அருகே மூலிமங்கலம், புகழூர் செல்லும் பிரிவு சாலை உள்ளது. இந்நிலையில் சேலம்-மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை வழியாக கரூர், திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், ராமேஸ்வரம், திருச்சி, தஞ்சாவூர் ,கும்பகோணம், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும், மதுரை-சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக பரமத்தி, வேலூர், திருச்செங்கோடு, சங்ககிரி, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் சென்று வருகின்றன.
ஏராளமான வாகனங்கள்
அதேபோல் இந்த இரு தேசிய நெடுஞ்சாலை வழியாக கார்கள், பல்வேறு வகையான லாரிகள், வேன்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள், பல்வேறு சரக்கு வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் இந்த இரு தேசிய நெடுஞ்சாலை வழியே செல்லும் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மூலிமங்கலம் பிரிவு சாலை வழியாக டி.என்.பி.எல். சிமெண்டு ஆலைக்கும், டி.என்.பி.எல். காகித ஆலைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான லாரிகளில் மூலப்பொருளை ஏற்றி வருகின்றனர். அதேபோல் சிமெண்டு ஆலை மற்றும் காகித ஆலையில் இருந்து தயாரிக்கப்படும் சிமெண்டு மூட்டைகள் மற்றும் காகித ரோல்கள் மற்றும் காகிதப் பண்டல்களை எடுத்துச் செல்கின்றனர்.
தொடர் விபத்து
அதேபோல் புன்னம் சத்திரம், பரமத்தி, தென்னிலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் ஜல்லி, கற்கள், இயற்கை மணல்களை ஏற்றிக் கொண்டு செல்லும் லாரிகள் அதிவேகமாக சென்று வருகின்றன. அதேபோல் பள்ளி, கல்லூரி வாகனங்களும், இருசக்கர வாகனங்களும், பல்வேறு வாகனங்களும் மூலிமங்கலம் பிரிவு சாலையிலும், புகழூர் செல்லும் பிரிவு சாலையிலும் தேசிய நெடுஞ்சாலையின் இரு சாலையை கடந்து செல்கின்றனர். அனைத்து வாகனங்களும் அதிவேகமாக செல்வதால் திடீரென வாகனங்கள் சாலை கடக்கும்போது இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டு வருகிறது.
ஒரு வருடத்திற்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட விபத்துகள் இந்த இடத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்டுக்கு 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். ஏராளமானோர் கை,கால் களை இழந்தும் பலர் பல்வேறு உடல் உறுப்புகளை இழந்தும் வருகின்றனர். இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை உருவாக்கப்பட்ட போது இந்த சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ,சமூக ஆர்வலர்கள் மூலிமங்கலம் மற்றும் புகழூர் செல்லும் பிரிவு சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் அதை கண்டு கொள்ளவில்லை. மேம்பாலமும் அமைக்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தை சந்தித்து வருகின்றனர்.
உயிரிழப்பு நடக்கிறது
மூலிமங்கலம் பிரிவு அருகே கடை வைத்திருக்கும் மூனூட்டுப் பாளையத்தை சேர்ந்த செல்வகுமார்:-
இந்த மூலிமங்கலம் பிரிவு சாலையில் நீண்ட நாட்களாக கடை வைத்துள்ளேன். மூலிமங்கலம் பிரிவு சாலையில் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. இந்த வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் அதிவேகமாக செல்லும்போது இருசக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்களும் தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போது விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த பகுதியில் மேம்பாலம் அமைத்தால் விபத்துக்களை தடுக்க முடியும்.
அடிக்கடி விபத்து
லாரி டிரைவர் முருகன்:-நான் மதுரை மற்றும் பல்வேறு பகுதியில் இருந்து காகித ஆலை மற்றும் சிமெண்டு ஆலைக்கு நிலக்கரி மற்றும் பல்வேறு மூலப்பொருள்களை ஏற்றி வருவது வழக்கம் .இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் அதிவேகமாக வருகின்றன .அப்போது அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. சில நேரங்களில் பின்னால் வரும் வாகனங்கள் முன்னால் செல்லும் வானங்கள் மீது மோதி விபத்து ஏற்படுவது வழக்கமாக உள்ளது. எனவே இந்த பகுதியில் மேம்பாலம் அமைத்தால் பிரிவு சாலையில் செல்லும் வாகனங்கள் மேம்பாலத்தை ஒட்டி வரும் சர்வீஸ் சாலையில் செல்வார்கள். அதனால் விபத்தை தடுக்க முடியும்.
அதிகளவில் பாதிப்பு
நாணப்பரப்பு பகுதியை சேர்ந்த ஜெகதீஷ்:-
இரு தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டி திருமண மண்டபங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்கள், காக்கி பேப்பர் தயாரிக்கும் நிறுவனங்கள், தேவாலயங்கள் உள்ளன .கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள திருமண மண்டபத்திற்கு திருமணத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கணவன்-மனைவி இருவரும் சாலையை கடக்கும்போது பஸ் மோதி விபத்து ஏற்பட்டு மனைவி கண் முன்ேன கணவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அது பெரும் சோகத்தையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியது . அதேபோல் பள்ளிக்கூடங்களுக்கு செல்லும் வாகனங்களும், அதிக அளவில் இருசக்கர வாகனங்களும் சாலையை கடக்கும்போது அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன. எனவே மேம்பாலத்தை அமைத்து இரு தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் சர்வீஸ் ரோடு அமைத்து மேம்பாலத்திற்கு அடியில் வாகனங்கள் செல்லும்போது விபத்தினை தவிர்க்க இயலும். எனவே இப்பகுதியில் விரைந்து மேம்பாலம் அமைக்க வேண்டும்.
விபத்துகளை பார்த்துள்ளேன்
லாரி டிரைவர் வெங்கடாசலம்:-
நான் தாரமங்கலம், சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து லாரியில் புகழூர் காகித ஆலை மற்றும் சிமெண்டுஆலைக்கும் பொருட்களை ஏற்றி வந்து இறக்கி செல்வது வழக்கம். அதேபோல் தேசிய நெடுஞ்சாலை வழியாக பல்வேறு மாவட்டங்களுக்கும் இந்த வழியாக பல்வேறு பொருட்களை லாரியில் ஏற்றி சென்று வருகிறேன். நான் என் கண் முன்னே பல விபத்துகளை பார்த்துள்ளேன். ஏராளமான விபத்துகள் இந்த பிரிவு சாலையில் ஏற்பட்டு வருகிறது. அதனால் நிறைய உயிரிழப்பு ஏற்படுகிறது. மனித உயிர் தேவையற்ற முறையில் பிரிவது வேதனை அளிக்கிறது. எனவே இந்த பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மேம்பாலம் அமைத்து விபத்துக்கள் நடைபெறுவதை தடுக்க வேண்டும்.