< Back
மாநில செய்திகள்
அயோத்தியாப்பட்டணம் ெரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்கப்படுமா?-வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு
சேலம்
மாநில செய்திகள்

அயோத்தியாப்பட்டணம் ெரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்கப்படுமா?-வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தினத்தந்தி
|
16 Nov 2022 3:57 AM IST

அயோத்தியாப்பட்டணம் ரெயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

அயோத்தியாப்பட்டணம்:

ரெயில்வே கேட்

சேலத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் அரூர், திருப்பத்தூர், ஊத்தங்கரை, திருவண்ணாமலை உள்பட முக்கிய ஊர்களுக்கு செல்லும் பாதையில் அமைந்துள்ளது அயோத்தியாப்பட்டணம் ரெயில்வே கேட். மேலும் இந்த பாதை வாணியம்பாடி வழியாக சென்னை, திருப்பதி செல்லும் பிரதான சாலையாகவும் விளங்குகிறது.

அரசு பஸ்கள், தனியார் பஸ்கள், லாரிகள், கனரக வாகனங்கள் என தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த ரெயில்வே கேட்டை கடக்கின்றன. இந்த சாலையில் அதிக அளவில் வாகனங்கள் செல்வதற்கு காரணம் சேலத்தில் இருந்து வேலூர் வரை சுங்கச்சாவடி கிடையாது. இதனால் சென்னை, திருப்பதி செல்லக்கூடிய கனரக வாகனங்கள் இந்த பாதையில் அதிகளவில் செல்கின்றன.

3 சாலைகள் சந்திப்பு

மேலும் அயோத்தியாப்பட்டணத்தை சுற்றியுள்ள 70-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் இந்த ெரயில்வே கேட்டு வழியாக தான் சேலத்துக்கு வந்து செல்ல வேண்டும். இதுமட்டுமின்றி சேலத்தில் இருந்து பொன்னம்மாபேட்ைட, அம்மாபேட்டை, உடையாப்பட்டி, அயோத்தியாப்பட்டணம் வழியாக ஆத்தூர், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்ைட, கடலூர், புதுச்சேரி, சென்னை செல்லும் பிரதான சாலையும் உள்ளது. இந்த சாலையில் அயோத்தியாப்பட்டணத்தில் ரெயில்வே கேட் பகுதியில் தான் அரூருக்கு சாலை பிரிகிறது. இதனால் 3 சாலைகள் சந்திப்பில் இந்த ரெயில்வே கேட் காணப்படுகிறது.

சேலத்தில் இருந்து விருத்தாசலம் மார்க்கமாக செல்லும் பயணிகள் ரெயில்கள், எக்ஸ்பிரஸ் ரெயில், சரக்கு ரெயில்கள் வரும் போது கேட் மூடப்படுகிறது. கேட் மூடப்பட்டால் சாலையின் இரு பக்கங்களிலும் பஸ்கள், லாரிகள், கார் மற்றும் வேன்கள், இருசக்கர வாகனங்கள் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் காத்திருக்கிறது. இதனால் ெரயில்வே கேட் திறந்த பின்னர், அதனை கடப்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு மேலாகிறது. அந்த அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அப்போது மற்றொரு நேர் பாதையான ஆத்தூர் ரோட்டிலும் வாகனங்கள் செல்வதிலும் சிரமம் ஏற்படுகிறது.

இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் தினமும் அல்லல்படுகிறார்கள். இதற்கு தீர்வு தான் என்ன? என்ற கேள்வி வாகன ஓட்டிகள் மத்தியில் எழுகிறது. இந்த போக்குவரத்து நெரிசல் பிரச்சினை தீர அங்கு ரெயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து பொதுமக்கள் தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு:-

3 ஆயிரம் பேர்

முன்னாள் தென்னக ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் சி.பி.வைத்திலிங்கம்:-

அயோத்தியாப்பட்டணம் ரெயில் நிலையம் வழியாக விருத்தாசலத்தில் இருந்து சேலத்திற்கு பயணிகள் ரெயில் தினமும் காலை 8.30 மணிக்கு சென்று, மீண்டும் 10 மணிக்கு அயோத்தியாப்பட்டணம் வழியாக விருத்தாசலம் செல்கிறது. இது மட்டுமின்றி சரக்கு ரெயில்கள், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் செல்லும்போது கேட் மூடப்படுகிறது. காலை நேரத்தில் மட்டும் ஒரு நாளைக்கு 3 முறை கேட் மூடப்படுகிறது. இதனால் காலையில் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி மாணவ மாணவிகளை ஏற்றிச்செல்லும் பஸ்கள் என ஏராளமான வாகனங்கள் காத்திருக்கின்றன.

பின்னர் கேட் திறந்தவுடன் செல்வதற்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு மேல் ஆகிறது. ரெயிலில் செல்லும் பயணிகள் சுமார் 500 பேர் இருப்பார்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் கேட் மூடுவதால் சுமார் 3 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படுகிறார்கள். இதே போல பெங்களூருவில் இருந்து காரைக்கால் செல்லும் பயணிகள் ரெயில் மதியம் 1.30 மணிக்கு கடந்து செல்கிறது. மீண்டும் மாலையில் 4 மணிக்கு விருத்தாசலத்தில் இருந்து சேலத்திற்கும், இரவு 7 மணிக்கு சேலத்தில் இருந்து விருத்தாசலத்திற்கும் ரெயில் செல்கிறது. இதனால் மாலையில் ரெயில்வே கேட் மூடப்படும் போது வீடு திரும்புவோர் அவதிப்படுகிறார்கள்.

சுரங்கப்பாதை

இதுமட்டுமின்றி இரவு நேரத்தில் 4 முறை கேட் மூடப்படுகிறது. ஒரு நாளைக்கு சுமார் 15 முறை கேட் மூடப்படுவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் தினமும் அல்லல்படுகிறார்கள். எனவே 3 சாலைகள் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ள இந்த ரெயில்வே கேட் பகுதியில் போர்க்கால அடிப்படையில் ரெயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும்.. மேலும் மேம்பாலம் கட்டும் வரை ெரயில்வே கேட் அருகே உள்ள சுரங்கப்பாதையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அதாவது கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக சுரங்கப்பாதை கட்டும் பணி பாதியில் நிற்கிறது. இந்த சுரங்கப்பாதையில் கழிவுநீர், மழைநீர் தேங்கி நிற்கிறது. இதை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதுடன், கேட் மூடும் போது இரு சக்கர வாகனங்கள், கார், வேன் ஆகியவை செல்லும் வகையில் வழி ஏற்படுத்த வேண்டும். இதனால் போக்குவரத்து பாதிப்பு குறையும். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாசிநாயக்கன்பட்டியை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை தனலட்சுமி:-

அயோத்தியாப்பட்டணம் பகுதியில் இருந்து சேலத்துக்கு பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அதிக அளவில் சென்று வருகிறார்கள். ரெயில்வே கேட் மூடப்பட்டு, மீண்டும் திறக்கப்பட்டால் அதனை கடப்பதற்கு 1 மணி நேரத்துக்கு மேல் ஆகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல காலம் தாமதமாகிறது. மேலும் வலசையூர், அயோத்தியாப்பட்டணம், அக்ரஹாரம் நாட்டாமங்கலம், ஆகிய பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு நேரம் ஆகிறது.. இதனால் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆம்புலன்ஸ்

பூசாரிப்பட்டியை சேர்ந்த மஞ்சுளா:-

அனுப்பூர், பூசாரிப்பட்டி, கூட்டாத்துபட்டி, சர்க்கார் நாட்டாமங்கலம் சேலம் செல்வதற்கு அயோத்தியாப்பட்டணம் வழியாக தான் செல்ல வேண்டும். அவசர சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள மருத்துவமனைக்கு செல்லும்போது அயோத்தியாப்பட்டணம் ெரயில்வே கேட் மூடப்பட்டிருந்தால், அதனை கடந்து செல்வதற்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. இதனால் நோயாளிகள் கடும் அவதிப்படுகிறார்கள். சில நேரங்களில் ரெயில்வே கேட் மூடப்படும் போது ஆம்புலன்ஸ் வாகனங்களும் சிக்கி விடுகின்றன. இந்த பிரச்சினைக்கு ஒரே தீர்வு மேம்பாலம் கட்டுவது தான்.

விவசாயி தர்மலிங்கம்:- அயோத்தியாப்பட்டணம் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது விளை பொருட்களை சேலத்தில் உள்ள சந்தைகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்கிறார்கள். ரெயில்வே கேட் அடிக்கடி மூடுவதால் விளை பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் நிற்பதால், மார்க்கெட்டுக்கு காய்கறிகள், கீரைகள் உள்பட விளை பொருட்களை கொண்டு செல்ல நேரமாகி விடுகிறது. சில நாட்களில் அதிகாலை 4 மணி அளவிலும் ரெயில்வே கேட் மூடப்படுகிறது. இதனால் சேலம் செல்வதற்குள் பெரும் சிரமம் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேம்பாலம் அமைக்க வேண்டும்

வலசையூரை சேர்ந்த சமூக ஆர்வலர் பழனிவேல்:-

அயோத்தியாப்பட்டணம் ெரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் கிராமப் பகுதியில் இருந்து மில் தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள், வேலைக்கு செல்லும் போதும், இரவு நேரங்களில் திரும்பும்போதும் மிக அவதிக்குள்ளாகின்றனர். ெரயில்வே கேட் அருகில் போலீசார் சோதனைச்சாவடி உள்ளது. கேட் மூடி திறக்கும் போது போக்குவரத்து பாதிப்பை போலீசார் சரி செய்ய வேண்டும். அயோத்தியாப்பட்டணத்தில் சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கலாம்.

பூசாரிப்பட்டியை சேர்ந்த பூமலை:- இந்த ெரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படுகிறது பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். இங்குஅயோத்தியாப்பட்டணத்தில் இருந்து வாணியம்பாடி வரை சாலையை அகலப்படுத்தி வருகிறார்கள். இதனால் கனரக வாகனங்கள் மற்றும் பஸ், லாரி அதிக அளவில் செல்வதால் மேம்பாலம் அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்