விருதுநகர்
வன உயிரின விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள்
|ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் சார்பில் வனவிலங்கு வார விழாவை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் மேகநாத ரெட்டி பரிசுகள் வழங்கினார்.
விருதுநகர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் சார்பில் வனவிலங்கு வார விழாவை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் மேகநாத ரெட்டி பரிசுகள் வழங்கினார்.
போட்டிகள்
வன உயிரினங்களை பாதுகாக்க வலியுறுத்தும் வகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம், ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டத்தின் சார்பில் வன உயிரின வாரவிழாவை முன்னிட்டு வன உயிரினங்களை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்போட்டி, கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டது. மாவட்ட அளவில் ஓவிய போட்டிகளில் 250 மாணவர்களும் பேச்சுப்போட்டியில் 25 மாணவ-மாணவிகளும் கட்டுரை போட்டியில் 150 பேரும் கலந்து கொண்டனர்.
பரிசு வழங்கினார்
இந்த போட்டியில் வெற்றி பெற்ற 46 மாணவ-மாணவியருக்கு கலெக்டர் மேகநாதரெட்டி பரிசுகள் வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
வனப்பரப்பு அதிகரிக்க பல்வேறு வகையான மரங்கள் நடப்பட்டு உள்ளது. காடுகள் இல்லை என்றால் மனித குலமே இல்லை என்று சொல்லலாம். காடுகள் என்பது அதில் வசிக்கும் விலங்குகளையும் சேர்த்து தான். சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது காடுகள் பாதுகாப்பில் தான் இருக்கிறது. காடுகளையும் விலங்குகளையும் பாதுகாப்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இயற்கையை பாதுகாத்தால் அது நம்மை வாழ வைக்கும். எனவே நாம் அனைவரும் நம்மால் இயன்றவரை காடுகளையும் காடுகளில் வாழும் வன உயிரினங்களையும் பாதுகாப்பதற்கு உறுதியேற்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி ரவிக்குமார், துணை ஆட்சியர் சாலினி உள்ளிட்ட அதிகாரிகள் மாணவ-மாணவியர் கலந்து கொண்டனர்.