நீலகிரி
வனவிலங்குகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
|ஊட்டி, கோத்தகிரியில் வனவிலங்குகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
நீலகிரி வன கோட்டம் சார்பில், வன உயிரின வார விழாவையொட்டி ஊட்டியில் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊட்டியில் கலெக்டர் அலுவலகம் அருகே தொடங்கிய பேரணி சேரிங்கிராஸ் வழியாக சென்று ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் நிறைவடைந்தது. இதில் உதவி வன பாதுகாவலர் சரவணகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். கோத்தகிரி மற்றும் கீழ் கோத்தகிரி வனச்சரகம் சார்பில், கோத்தகிரியை சேர்ந்த கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை வனச்சரகர்கள் செல்வராஜ், ராம் பிரகாஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கோத்தகிரியில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்போட்டி நடைபெற்றது. குந்தா வனச்சரகத்தில் வனச்சரகர் செல்வகுமார் தலைமையில் வன உயிரின பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மேலூர் ஒசட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள், வன பணியாளர்கள் கலந்துகொண்டனர். பின்னர் பள்ளி மாணவர்களுக்கு ஓவியம், கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டது. கோத்தகிரி லாங்வுட் சோலை பாதுகாப்பு குழு, கோத்தகிரி வனச்சரகம் சார்பில், சிறப்பு கருத்தரங்கு கோத்தகிரியில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் லாங்வுட் சோலை பாதுகாப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் கே.ஜே.ராஜு கலந்துகொண்டு காடுகள் மற்றும் வனவிலங்குகளை பாதுகாக்க வேண்டும் என்றார்.