கொடைக்கானலில் கட்டுக்கடங்காமல் எரியும் காட்டுத்தீ: அணைக்கும் பணி தீவிரம்
|கொடைக்கானல் மேல்மலை வனப்பகுதியில் தீயை அணைக்கும் பணியில் 300 பேர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கொடைக்கானல்,
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் கடந்த சில வாரங்களாகவே கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதனால் மலைப்பகுதிகளில் உள்ள புற்கள், செடி, கொடிகள், மரங்கள் காய்ந்துள்ளன. மேலும் வனப்பகுதி மற்றும் வருவாய் நிலங்களில் அவ்வப்போது காட்டுத்தீ எரிவதும், அணைவதுமாக உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடைக்கானல் மேல்மலையில் பூம்பாறை, கூக்கால், மன்னவனூர் உள்ளிட்ட வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிய தொடங்கியது. வனப்பகுதியில் இருந்து பரவிய காட்டுத்தீ கடந்த 5 நாட்களாக பூம்பாறை வனப்பகுதி மற்றும் மன்னவனூர் செல்லும் மலைப்பாதையின் இருபுறங்களிலும், கூக்கால் கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலையின் ஓரத்திலும் பரவி எரிந்து வருகிறது.
தீயை அணைக்கும் பணியில் கொடைக்கானல் தீயணைப்பு படைவீரர்கள், வனத்துறை ஊழியர்கள், நகராட்சி பணியாளர்கள், நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் சேர்ந்து இரவு, பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று 6-வது நாளாக கொடைக்கானல் மேல்மலை பகுதியில் கட்டுக்கடங்காமல் காட்டுத்தீ பற்றி எரிந்தது. இதனால் விண்ணை முட்டும் அளவுக்கு புகைமூட்டம் பரவி காணப்பட்டது. ஏற்கனவே காட்டுத்தீ ஏற்பட்ட இடங்கள் சாம்பல் மேடாக காட்சியளிக்கின்றன.
இதற்கிடையே மாநில தீயணைப்பு துறை இயக்குனர் ஆபாஷ்குமார் ஆலோசனையின்பேரில் மண்டல துணை இயக்குனர் சரவணகுமார் மற்றும் மாவட்ட தீயணைப்பு அலுவலர்கள் தலைமையில் பெரியகுளம், வாடிப்பட்டி, வையம்பட்டி, பழனி, ஈரோடு, திருப்பூர், கோவை, பெருந்துறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு வாகனங்களுடன் சுமார் 100 தீயணைப்பு படைவீரர்கள் காட்டுத்தீ ஏற்பட்ட இடங்களுக்கு வந்தனர்.
மேலும் 8 போலீஸ் வஜ்ரா வாகனங்கள் தண்ணீருடன் வரவழைக்கப்பட்டன. அதேபோல் பல்வேறு நகராட்சிகளில் இருந்து தண்ணீர் லாரிகளும் கொண்டுவரப்பட்டன. இதையடுத்து சுமார் 300-க்கும் மேற்பட்டோர் இணைந்து காட்டுத்தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
காட்டுத்தீயால் வனப்பகுதியில் வசிக்கும் வனவிலங்குகள் வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்து வருகின்றன. இந்த தீவிபத்தில் அரியவகை மூலிகை செடிகள், மரங்கள் எரிந்து நாசமாகின. மேலும் மலைப்பாதைகளில் தீ எரிவதால் மேல்மலை கிராமங்களுக்கு செல்லும் உள்ளூர் மக்கள் மிகுந்த சிரமத்துடனும், அச்சத்துடனும் சாலையை கடந்து செல்கின்றனர்.
தற்போது சாலையோரங்களில் தீ அணைக்கப்பட்ட நிலையில் மலை உச்சிகளில் தீ கட்டுக்குள் வராமல் தொடர்ந்து எரிந்து வருகிறது. எனவே மாநில வனத்துறை கூடுதல் கவனம் செலுத்தி, நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் ஹெலிகாப்டர் கொண்டு தீயை அணைத்ததுபோன்று, கொடைக்கானல் மலைப்பகுதியில் எரியும் காட்டுத்தீயை அணைக்க வேண்டும் என்று பொதுமக்கள், இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.