சேலம்
வனப்பகுதியில் மீண்டும் காட்டுத்தீ
|எடப்பாடி:-
எடப்பாடி அருகே சூரியன் மலை வனப்பகுதியை ஒட்டிய நிலப்பரப்பில், மீண்டும் காட்டுத்தீ ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
காட்டு தீப்பரவியது
எடப்பாடி-சங்ககிரி பிரதான சாலையில் உள்ள அரசு கலைக்கல்லூரி எதிர்புறம் சூரியன்மலை வனப்பகுதியில் கடந்த மாதம் 25-ந் தேதி திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனால் வனப்பகுதியில் காய்ந்து கிடந்த மரம், செடி, கொடிகள் எரிந்து சாம்பலானது. அப்போது தீயணைப்பு படை வீரர்கள் அங்கு பற்றி எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை திடீரென மீண்டும் எடப்பாடி-சங்ககிரி சாலையில் உள்ள மாதேஸ்வரன் கோவில் பின்புறம் உள்ள வனப்பகுதி மற்றும் தனியார் நிலப்பகுதிகளில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இது குறித்து அப்பகுதி மக்கள் எடப்பாடி தீயணைப்பு படையினருக்கு தகவல் அளித்தனர்.
தீயணைப்பு படையினர்...
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீயின் தாக்கம் அதிகம் இருந்ததால் அப்பகுதியில் காய்ந்திருந்த மரம் மற்றும் செடி கொடிகள் எரிந்து சாம்பலானது.
தொடர்ந்து இப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் அடிக்கடி தீப்பற்றி எரிவதால் இப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.