கோயம்புத்தூர்
வால்பாறையில் பள்ளிக்கூட சத்துணவு மையத்தை சேதப்படுத்திய காட்டு யானை-அரிசிகளை தின்றும், வீசியும் அட்டகாசம்
|வால்பாறையில் பள்ளிக்கூட சத்துணவு மையத்தை சேதப்படுத்திய காட்டு யானை அரிசிகளை தின்றும், வீசியும் அட்டகாசம் செய்தது.
வால்பாறை
வால்பாறையில் பள்ளிக்கூட சத்துணவு மையத்தை சேதப்படுத்திய காட்டு யானை அரிசிகளை தின்றும், வீசியும் அட்டகாசம் செய்தது.
சுவரை உடைத்தது
கேரள வனப் பகுதியில் இருந்து வந்த காட்டு யானைகள் கூட்டம் வால்பாறை வனப் பகுதிகளில் பல்வேறு எஸ்டேட் பகுதியில் முகாமிட்டு சுற்றித்திரிந்து வருகிறது. இந்த நிலையில் கூட்டத்துடன் சேராமல் தனியாக சுற்றித்திரிந்து வரும் ஒற்றை யானை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் அதிகாலை மற்றும் நள்ளிரவில் நுழைந்து சேதங்களை ஏற்படுத்தி வருகிறது.
குரங்குமுடி எஸ்டேட் பகுதி வனச் சோலையில் கடந்த ஒருவாரமாக முகாமிட்டிருந்த அந்த காட்டு யானை நேற்று அதிகாலை 3.30 மணியளவில் செங்குத்துப்பாறை எஸ்டேட் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பின் சுற்று சுவரை உடைத்து உள்ளே புகுந்தது.
அரிசி மூட்டைகளை தூக்கி வீசியது
அப்போது குடியிருப்பில் தங்கியிருந்த வடமாநில தொழிலாளர்கள் பயந்து போய் கூச்சலிட்டு யானையை துரத்தியுள்ளனர்.
ஆனால் யானை அங்கிருந்து போகாமல் குடியிருப்பு பகுதியிலிருந்த வீடுகளின் கூரை ஓடுகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளது. இதனால் பயந்து போன வட மாநில தொழிலாளர்கள் வீட்டுக்குள் பயத்தில் பதுங்கிக் கொண்டனர்.
பின்னர் குடியிருப்புக்குள்ளிருந்த செங்குத்துப்பாறை நகராட்சி தொடக்கப்பள்ளியின் சுற்றுச்சுவரை உடைத்து உள்ளே நுழைந்தது.
இதையடுத்து அந்த ஒற்றை யானை பள்ளி சத்துணவு மையத்தின் ஜன்னலை உடைத்து துதிக்கையை உள்ளே விட்டு சத்துணவு அரிசி மூட்டையை எடுத்து வெளியே வைத்து அரிசியை தின்றதோடு அரிசி மூட்டைகளை தூக்கி வீசி அட்டகாசத்தில் ஈடுபட்டது.
இதையடுத்து அந்த யானை தானாகவே வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.