< Back
மாநில செய்திகள்
தென்னை, மா மரங்களை சூறையாடிய காட்டு யானைகள்
வேலூர்
மாநில செய்திகள்

தென்னை, மா மரங்களை சூறையாடிய காட்டு யானைகள்

தினத்தந்தி
|
1 March 2023 11:18 PM IST

பேரணாம்பட்டு அருகே தென்னை மற்றும் மா மரங்களை காட்டு யானைகள் சூறையாடின. வனத்துறையினர் வராததால், பொதுமக்களோ, யானைகளை காட்டுக்குள் விரட்டினர்.

காட்டு யானைகள்

பேரணாம்பட்டு அருகே சேராங்கல், எருக்கம்பட்டு, கோட்டையூர், பத்தலப்பல்லி, அரவட்லா மலைப்பகுதி உள்ளிட்ட கிராமங்களில் காட்டு யானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில் பேரணாம்பட்டு அருகே உள்ள சேராங்கல் கிராமத்தில் கற்றாழை கொள்ளி வனப்பகுதியிலிருந்து 2 காட்டு யானைகள் வெளியேறி வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்தன.

செந்தில் என்பவருடைய தென்னந்தோப்பில் 14 தென்னை மரங்களை முறித்து சேதப்படுத்தியதோடு, அங்குள்ள மாந்தோப்பில் 4 மா மரங்களையும் சேதப்படுத்தி, மா பிஞ்சுகளை ருசித்து சேதப்படுத்தி, அங்கு நடப்பட்டிருந்த 6 முள் கம்பங்களை சாய்த்து அட்டகாசத்தில் ஈடுபட்டன.

பின்னர் மோகன் பாபு என்பவருடைய மாந்தோப்பில் 2 மா செடிகளை பிடுங்கியும், எலுமிச்சை தோட்டத்தில் எலுமிச்சை செடிகளையும், பாசனத்திற்கு செல்லும் பைப்புகளையும் நாசம் செய்தன. சுரேஷ் என்பவருடைய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த தீவன பயிரை ருசித்தும், மிதித்தும், அருகிலுள்ள ஆனந்த பாபு மாந்தோப்பில் புகுந்து அங்கிருந்த 2 முள்கம்பங்களையும் சேதப்படுத்தின.

பொதுமக்களே விரட்டினர்

இதுகுறித்து விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் வனத்துறையினர் யாரும் வராததலால், விவசாயிகளும், கிராம மக்களும் இணைந்து அதிகாலை வரை தீப்பந்தங்கள் கொளுத்தியும், பட்டாசு வெடித்தும், தாரை தப்பட்டை அடித்தும் வனப்பகுதிக்குள் விரட்டினர். வனத்துறையினர் சுமார் 13 மணி நேரம் கழித்து சென்று விசாரணை நடத்தினர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில் யானைகளை விரட்டுவதற்கு தகவல் தெரிவித்தும் வனத்துறையினர் யாருமே வராததால் விவசாயிகளாகிய நாங்களே போராடி யானைகளை விரட்டி வருகிறோம். தரமான சோலார் மின்வேலிகள் இதுவரை அமைக்கப்படவில்லை. உயிருக்கு அஞ்சி விவசாய நிலங்களுக்கு கூட செல்ல பயமாக உள்ளது என தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்