< Back
மாநில செய்திகள்
பேத்துப்பாறை பகுதியில் புகுந்த காட்டுயானைகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

பேத்துப்பாறை பகுதியில் புகுந்த காட்டுயானைகள்

தினத்தந்தி
|
27 Oct 2023 4:30 AM IST

கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை பகுதியில் காட்டுயானைகள் புகுந்தன.

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானல் வனப்பகுதியில் ஏராளமான காட்டுயானைகள் உள்ளன. இந்த யானைகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு கிராமங்களுக்குள் புகுந்து விடுகின்றன. இதில் கொடைக்கானல் தாலுகா வில்பட்டி ஊராட்சியை சேர்ந்த மலைக்கிராமங்களான பேத்துப்பாறை, அஞ்சுவீடு, பாரதி அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டுயானைகள் கடந்த சில நாட்களாக முகாமிட்டு அட்டகாசம் செய்து வருகின்றன. இந்நிலையில் நேற்று பேத்துப்பாறை பகுதிகளில் 3 காட்டுயானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து வாழை, அவரை, பீன்ஸ் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தின. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. காட்டுயானைகள் முகாமிட்டு இருப்பதால் தோட்டப் பகுதிகளுக்கும், தோட்ட வீடுகளுக்கும் செல்ல முடியாமல் கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.

மேலும் இரவு நேரங்களில் யானைகள் திடீரென்று உலா வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டாலும் அவைகள் அங்கிருந்து வெளியேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே கூடுதல் வனத்துறையினரையும், வேட்டை தடுப்பு காவலர்களையும் நியமித்து யானைகளை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்