திண்டுக்கல்
3 கடைகளை சேதப்படுத்திய காட்டு யானைகள்
|கொடைக்கானலில் 3 கடைகளை காட்டுயானைகள் சேதப்படுத்தின. அவற்றை வனப்பகுதிக்குள் துரத்த வந்த வனத்துறையினரை யானைகள் விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடைகள் சேதம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேரிஜம் பகுதியில் கடந்த சில நாட்களாக குட்டியுடன் 4 காட்டுயானைகள் சுற்றித்திரிந்தன. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அந்த யானைகள் மோயர் பாயிண்ட் பகுதிக்கு வந்தன. பின்னர் அப்பகுதியை சேர்ந்த மாரி, சேர்மன், எல்லம்மாள் ஆகிய 3 பேருக்கு சொந்தமான கடைகளை சேதப்படுத்த தொடங்கின. இதுகுறித்து தகவலறிந்த கொடைக்கானல் வனச்சரகர் சிவக்குமார், வனவர் முத்துராமலிங்கம் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
ஆனால் அதற்குள் அந்த யானைகள் 3 கடைகளையும் முழுமையாக சேதப்படுத்தின. பின்னர் பட்டாசு வெடித்தும், தீப்பந்தம் காட்டியும் காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் துரத்தும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். மேலும் தங்களின் வாகனங்களில் காட்டுயானைகளை பின்தொடர்ந்து சென்றனர்.
வனத்துறையினரை விரட்டியது
அப்போது காட்டுயானைகளில் ஒன்று வனப்பகுதிக்குள் செல்லாமல், பின்னால் வந்த வனத்துறையினரை விரட்டும் வகையில் அவர்களின் வாகனங்களை நோக்கி ஓடிவந்தது. இதனால் பதற்றமடைந்த வனத்துறையினர் தங்கள் வாகனங்களை திருப்பிக்கொண்டு நகர் பகுதியை நோக்கி விரைந்து வந்தனர். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை வனத்துறையினரை விரட்டி வந்த யானை அதன் பிறகு பேரிஜம் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.
அதன் பின்னர் வனத்துறையினர் பேரிஜம் வனப்பகுதிக்கு சென்று யானைகள் உள்ளே சென்றுவிட்டனவா? என்று பார்வையிட்டு உறுதிப்படுத்திக்கொண்டனர். யானைகளை விரட்ட வந்த வனத்துறையினரை ஒரு காட்டுயானை விரட்டி வந்த சம்பவம் கொடைக்கானலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நகரசபை தலைவர் ஆறுதல்
கடந்த 15 நாட்களுக்கு முன்பு இந்த பகுதிக்கு வந்த காட்டுயானைகள் 12 கடைகளை சேதப்படுத்தின. தற்போது மேலும் 3 கடைகளை சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளன. எனவே குடியிருப்பு பகுதிக்கு காட்டுயானைகள் வராமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த நகர சபை தலைவர் செல்லத்துரை, துணை தலைவர் மாயக்கண்ணன் ஆகியோர் சேதமடைந்த கடைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் வியாபாரிகளுக்கு ஆறுதல் கூறிய நகர சபை தலைவர், உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.