நீலகிரி
கும்கி யானையுடன் காட்டு யானைகள் மோதல்
|சேரங்கோடு அருகே கும்கி யானையுடன் காட்டு யானைகள் மோதிக்கொண்டன.
பந்தலூர் தாலுகா சேரங்கோடு அருகே படச்சேரியில் நேற்று முன்தினம் இரவு 2 காட்டு யானைகள் புகுந்தன. அங்கு பயிர்களை சேதப்படுத்தின. பின்னர் வீட்டு முன்பு நிறுத்தப்பட்டு இருந்த தமிழ்வாணன் என்பவரது காரை யானைகள் சேதப்படுத்தின. கந்தசாமி என்பவரது வீட்டின் மேற்கூரையை உடைத்தது. இதனால் பொதுமக்கள் பீதியில் வீடுகளுக்குள் முடங்கினர். அந்த பகுதியில் முதுமலையில் இருந்து வரவழைக்கப்பட்ட விஜய், வசீம் ஆகிய 2 கும்கி யானைகள் கண்காணிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டு இருந்தன. இதில் வசீம் கும்கி யானையுடன் காட்டு யானைகள் திடீரென மோதிக்கொண்டன. இதனால் கும்கி யானைக்கு காயம் ஏற்பட்டது. அப்போது மற்றொரு கும்கி யானை பிளிறியது. தொடர்ந்து காட்டு யானைகள் அங்கிருந்து சென்றன. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். தகவல் அறிந்த சேரம்பாடி வனச்சரகர் அய்யனார், வனவர் ஆனந்த் குணசேகரன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் முதுமலை புலிகள் காப்பக கால்நடை டாக்டர் ராஜேஸ்குமார் காயமடைந்த கும்கி யானைக்கு சிகிச்சை அளித்தார்.