நீலகிரி
வீட்டை உடைத்த காட்டு யானைகள்
|சேரம்பாடியில் வீட்டை உடைத்த காட்டு யானைகளால் பரபரப்பு ஏற்பட்டது.
பந்தலூர் அருகே சேரம்பாடி டேன்டீ ரேஞ்ச் எண் 1,2,3,4, எலியாஸ் கடை உள்பட பல பகுதிகளில் ஏராளமான தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அரசு மூலம் கட்டி கொடுக்கப்பட்ட குடியிருப்புகளில் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து வருகின்றன. இந்தநிலையில் சேரம்பாடி டேன்டீ தோட்டம் ரேஞ்ச் எண்.3 பகுதியில் உள்ள தொழிலாளர் குடியிருப்புக்குள் நேற்று முன்தினம் இரவு 2 காட்டு யானைகள் புகுந்தன. தொடர்ந்து அங்குள்ள குடியிருப்புகளை முற்றுகையிட்டன.
இதையடுத்து கணேஷ் மூர்த்தி என்பவரது வீட்டின் சமையலறையை யானைகள் உடைத்தன. பின்னர் அங்கு பானையில் இருந்த உணவு பொருட்களை வெளியே தூக்கி வீசி அதில் இருந்த சோற்றை தின்றன. இதனால் வீட்டில் தூங்கி கொண்டிருந்த தொழிலாளி குடும்பத்தினர் அச்சம் அடைந்து முடங்கினர். இந்த சம்பவத்தால் தொழிலாளர்கள் பீதி அடைந்து உள்ளனர். எனவே, காட்டு யானைகளை விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.