விருதுநகர்
பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள்
|அருப்புக்கோட்டை பகுதிகளில் பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை தடுப்பது குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை பகுதிகளில் பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை தடுப்பது குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காட்டுப்பன்றி
அருப்புக்கோட்டை பெரியபுளியம்பட்டி, பாளையம்பட்டி, கோபாலபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கம்பு, சோளம், சூரியகாந்தி உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருவது வழக்கம். வழக்கமாக ஆடிப்பட்டத்தில் விதை விதைத்து விவசாயிகள் விவசாய பணிகளை தொடங்குவர். தற்போது ஆடி மாதம் பிறந்த நிலையில் விவசாயிகள் விவசாய பணிகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் சென்ற ஆண்டில் விளைச்சல் அமோகமாக இருந்த போதிலும் காட்டுப்பன்றிகளால் ஏராளமான விளைநிலங்கள் சேதமடைந்தன.
நடவடிக்கை
காட்டுப்பன்றிகளிடம் இருந்து விவசாயிகள் தங்கள் பயிர்களை பாதுகாக்க முடியாமல் நஷ்டத்தை சந்தித்தனர்.
ஆதலால் இந்த ஆண்டும் காட்டு பன்றிகளால் பயிர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால் வனத்துறை அதிகாரிகள், வேளாண்துறை அதிகாரிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு விவசாய பயிர்களை பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் மேலும் கூறுகையில் பயிர்கள் நன்கு விளைந்து அறுவடைக்கு தயார் ஆகும் நிலையில் காட்டுப்பன்றிகள் வயலுக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்துகிறது.
இதனால் நாங்கள் போட்ட பணத்தை கூட எடுக்க முடியாத நிலை உள்ளது. எனவே காட்டுப்பன்றிகள் தாக்குதலில் இருந்து பயிர்களை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.