திருநெல்வேலி
வாழைகளை நாசம் செய்த காட்டு பன்றிகள்
|திருக்குறுங்குடி அருகே காட்டு பன்றிகள் வாழைகளை நாசம் செய்தன.
ஏர்வாடி:
திருக்குறுங்குடி அருகே மலையடிபுதூர் மலையடிவாரத்தில் உள்ள விளைநிலங்களில் காட்டு பன்றிகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. நேற்று முன்தினம் இரவு மாவடியை சேர்ந்த விவசாயிகள் ராமலிங்கம், டேவிட், ராஜலிங்கம் ஆகியோருக்கு சொந்தமான விளைநிலங்களில் புகுந்த காட்டு பன்றிகள் அங்கு பயிரிடப்பட்டுள்ள 100-க்கும் மேற்பட்ட வாழைகளை நாசம் செய்தன. இந்த வாழைகள் ஏத்தன் ரகத்தை சேர்ந்த 4 மாத வாழைகள் ஆகும். இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி திருக்குறுங்குடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காட்டு பன்றிகள் அட்டகாசத்தை தடுக்க வேண்டும், காட்டு பன்றிகளை வனவிலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.