திண்டுக்கல்
மக்காச்சோள பயிர்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்
|பட்டிவீரன்பட்டி அருகே மக்காச்சோள பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தின.
பட்டிவீரன்பட்டி அருகே ரெங்கராஜபுரம், சித்தரேவு, நெல்லூர், கரட்டுப்பட்டி, சிங்காரக்கோட்டை, ஒட்டுப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது மக்காச்சோளம், அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.
இந்த சமயத்தில் காட்டுப்பன்றிகள் தோட்டத்துக்குள் புகுந்து மக்காச்சோள பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. அதன்படி பெரும்பாறை, தாண்டிக்குடி மலைப்பகுதிகளில் இருந்து வெளியேறிய காட்டுப்பன்றிகள் ரெங்கராஜபுரத்தில் உள்ள விளைநிலங்களுக்குள் முகாமிட்டுள்ளன. இரவு நேரத்தில் கூட்டம், கூட்டமாக புகுந்து மக்காச்சோள பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சிங்காரக்கோட்டையை சேர்ந்த விவசாயி முருகன் கூறுகையில், ஒரு ஏக்கர் மக்காச்சோள பயிர் சாகுபடி செய்ய விதை, உரம், கூலி என மொத்தம் ரூ.35 ஆயிரம் வரை செலவாகிறது. மக்காச்சோளம் விளைவதற்கு 120 நாட்கள் ஆகும். மக்காச்சோளம் பயிரிட்டு தற்போது 110 நாட்கள் ஆகி விட்டது.
அறுவடைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், தற்போது தோட்டங்களுக்குள் காட்டுப்பன்றிகள் புகுந்து மக்காச்சோள பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் விளைநிலங்களுக்குள் காட்டுப்பன்றிகள் புகாமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.