< Back
மாநில செய்திகள்
விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள்

தினத்தந்தி
|
10 March 2023 12:15 AM IST

தஞ்சை அருகே கூட்டம், கூட்டாக திரியும் காட்டுப்பன்றிகள் வயல்களில் விளைந்த நெற்பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. மேலும் வரப்புகளையும் சேதப்படுத்துவதால் தண்ணீர் தேக்க முடியாமல் விவசாயிகள் வேதனையுடன் தவித்த வண்ணம் உள்ளனர்.


தஞ்சை அருகே கூட்டம், கூட்டாக திரியும் காட்டுப்பன்றிகள் வயல்களில் விளைந்த நெற்பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. மேலும் வரப்புகளையும் சேதப்படுத்துவதால் தண்ணீர் தேக்க முடியாமல் விவசாயிகள் வேதனையுடன் தவித்த வண்ணம் உள்ளனர்.

நெற்களஞ்சியம்

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். அதன்படி குறிப்பிட்ட தேதியில்தண்ணீர் திறக்கப்பட்டால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். தாமதமாக திறக்கப்பட்டால் குறுவை பரப்பளவு குறைந்து சம்பா, தாளடி சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும்.

ஆனால் கடந்த ஆண்டு மேட்டூர் அணை நிரம்பும் தருவாயில் இருந்ததால் முன்கூட்டியே அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் குறுவை சாகுபடி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி நடைபெற்றது. இதே போன்று சம்பா, தாளடி சாகுபடியும் இலக்கை தாண்டி அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டது.

அறுவடை பணிகள்

இதையடுத்து தற்போது சம்பா, தாளடி அறுடை பணிகள்தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல பகுதிகளில் அறுவடை பணிகள் முடிவடையும் தருவாயில் உளளது. ஒருசில பகுதிகளில் நடவுப்பணிகளில் தாமதம் ஏற்பட்டதாலும், பருவம் தவறி பெய்த மழையினால் ஏற்பட்ட சேதம் காரணமாகவும் தாமதமாக நடவு செய்யப்பட்ட வயல்களில் இன்னும் 20 நாட்களில் அறுவடை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தஞ்சையை அடுத்த வெள்ளாம்பெரம்பூர், தென்பெரம்பூர், நாகத்தி, அல்லூர், அரசக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் ஏராளமான விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். இந்த பகுதிகளில் அறுவடைக்கு இன்னும் 20 நாட்களுக்கு மேல் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம் இந்த பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

கூட்டம், கூட்டமாக திரியும் பன்றிகள்

குறிப்பாக விளைந்த நெற்பயிர்களையும், கதிர் வந்துள்ள நெற்பயிர்களையும் சேதப்படுத்துகின்றன. இந்த பகுதிகளில் கூட்டம், கூட்டமாக பன்றிகள் காணப்படுகின்றன. மேலும் நெல் சாகுபடி செய்துள்ள வயல்களின் வரப்புகளையும் சேதப்படுத்தி விடுகின்றன. இதனால் வயல்களில் தண்ணீர் தேக்க முடியாமலும் விவசாயிகள் வேதனை அடைந்த வண்ணம் உள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், வெள்ளாம்பெரம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 2019-ம் ஆண்டு ஒன்றிரண்டு காட்டுப்பன்றிகள் காணப்பட்டன. பன்றிகள் பல குட்டிகள் போடும் என்பதற்கு ஏற்ப தற்போது காட்டுப்பன்றிகள் எண்ணிக்கை பெருகி கூட்டம், கூட்டமாக வயல்களில் திரிகின்றன. இதனால் விளைநிலங்களை சேதப்படுத்துவதடன் விவசாயிகளுக்கும் பெரும் இழப்பு ஏற்படுகின்றன. ஆட்கள் நடமாட்டம் இருக்கும் போது பன்றிகள் அருகில் உள்ள ஆறு, வாய்க்கால்களில் உள்ள புதர்களுக்குள் சென்று விடுகின்றன.

கட்டுப்படுத்த வேண்டும்

அறுவடைக்கு தயராக உள்ள நெற்பயிர்களை சேதப்படுத்துவதால் நெல்மணிகள் உதிர்ந்து விடுகின்றன. விளைந்த பயிர்களில் படுத்து உருள்வதும், சண்டையிடுவதாக இருப்பதால் ஏராளமான விவசாயிகள் பாதி்க்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காட்டுப்பன்றிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்