விருதுநகர்
நெற்பயிர்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்
|காரியாபட்டி பகுதிகளில் நெற்பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
காரியாபட்டி,
காரியாபட்டி பகுதிகளில் நெற்பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
நெல் சாகுபடி
காரியாபட்டி, நரிக்குடி பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ள பொதுமக்கள் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர். விவசாயிகள் தங்களது நிலங்களில் நெல், பருத்தி, கடலை, வாழை, வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு பயிர் வகைகளை சாகுபடி செய்து வருகின்றனர். இந்தநிலையில் நெற்பயிர்களை காட்டுப்பன்றிகள் இரவு நேரத்தில் புகுந்து அழித்து வருகின்றன. காரியாபட்டி, நரிக்குடி பகுதிகளில் அதிக அளவில் காட்டுப்பன்றிகள் சுற்றி வருகின்றன. இரவு நேரங்களில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
அழிந்து போகும் விவசாயம்
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
காரியாபட்டி, நரிக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டுப்பன்றிகளின் தொல்லை அதிகமாக உள்ளது. இரவு நேரத்தில் வயலுக்குள் புகுந்து நெற்பயிர்களை சேதப்படுத்தி விட்டு செல்கிறது. புஞ்சை நிலங்களில் பயிரிடப்படும் கடலை மற்றும் பருத்தி போன்றவற்றை கடந்த 3 ஆண்டுகளாக பயிரிடப்படாமல் விட்டு விட்டதால் விவசாய நிலங்கள் அனைத்தும் தரிசு நிலங்களாக மாறி வருகிறது. காட்டுப் பன்றிகளால் இந்த பகுதியில் விவசாயமே அழிந்து போகும் நிலை இருந்து வருகிறது.
காட்டுப்பன்றிகளை ஒழிக்க வேண்டும் என்று இந்த பகுதி விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
நிவாரணம்
இந்தநிலையில் காரியாபட்டி தாலுகாவில் அல்லாளப்பேரி கிராமத்தில் புதுக்கண்மாய் பகுதியில் உள்ள நெல் வயல்களில் காட்டு பன்றிகள் புகுந்து சேதப்படுத்தியதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
பயிர்களை சேதப்படுத்தி வரும் காட்டுப்பன்றிகளை ஒழிக்கவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.