பெரம்பலூர்
மக்காச்சோள வயலில் காட்டுப்பன்றிகள் புகுந்து அட்டகாசம்
|வேப்பந்தட்டை அருகே மக்காச்சோளம் வயலில் காட்டுப்பன்றிகள் புகுந்து அட்டகாசம் செய்து வருவதால் இதற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காட்டுப்பன்றிகள் அட்டகாசம்
மக்காச்சோள பயிர் சாகுபடியில் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அளவில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பெற்று வருகிறது. இந்தநிலையில் பெரம்பலூர் மாவட்டம் பாப்பாங்கரை கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா(வயது40). இவர் அனுக்கூர் கிராமத்தில் விவசாயி ஒருவரது நிலத்தை 10 ஏக்கர் குத்தகைக்கு எடுத்து பயிர் சாகுபடி செய்து வருகிறார். அந்த நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார்.
இதற்கு கிணற்று நீர்பாசனம் மூலம் தண்ணீர் இரைத்து கடந்த 3 மாதங்களாக வளர்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வேப்பந்தட்டை வனப்பகுதியில் இருந்து வந்த காட்டு பன்றிகள் அவரது தோட்டத்திற்குள் புகுந்து ஏராளமான மக்காச்சோள பயிர்களை சேதப்படுத்தியுள்ளது. மேலும் பெரும்பகுதி மக்காச்சோள பயிர்களை கீழே தள்ளி அதில் இருந்த கதிர்களை மென்று குதறித் தள்ளி உள்ளது. இதனால் விவசாயி இளையராஜாவுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
நிவாரணம் வேண்டும்
மேலும் அந்தப் பகுதியில் விவசாயம் செய்துள்ள பலரது மக்காச்சோள வயல்களில் காட்டு பன்றிகள் புகுந்து பெரும் அட்டகாசம் செய்துள்ளது. மேலும் அவ்வப்போது மான்கள் கூட்டம் கூட்டமாக மக்காச்சோளம் வயலில் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.
வனப்பகுதியில் வாழும் காட்டுப்பன்றிகள் மற்றும் மான்களினால் விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு விவசாயிகளின் வயலில் ஏற்பட்டுள்ள சேத மதிப்பீடுகளை கணக்கீடு செய்து உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.