தேனி
வனவிலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுப்பன்றி நீக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
|வனவிலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுப்பன்றி நீக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
அழுது கொண்டு இருந்தாலும் உழுது கொண்டு இருப்பவர்கள் விவசாயிகள். பல்வேறு இடர்களை எதிர்கொண்டே விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். அதிக மழை, வறட்சி, இயற்கை பேரிடர் என ஒவ்வொன்றும் விவசாயத்தை பாதிக்கும். இவை ஒருபுறம் இருக்க தரமற்ற விதைகள், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவையும் விளை பொருட்கள் உற்பத்திக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
காட்டுப் பன்றிகள்
மழை பாதிப்பு, வறட்சி மற்றும் இயற்கை பேரிடர் போன்றவை எதிர்பாராமல் நிகழ்வது. அதே நேரத்தில் வன விலங்குகளால் விளை பயிர்கள் பாதிக்கப்படுவது என்பது அனைத்து காலங்களிலும் நிகழ்கிறது.
தேனி மாவட்டத்தில் தேவதானப்பட்டியில் தொடங்கி பெரியகுளம், தென்கரை, சோத்துப்பாறை, கைலாசப்பட்டி, அல்லிநகரம், பூதிப்புரம், அணைக்கரைப்பட்டி, போடி, ராசிங்காபுரம், பொட்டிப்புரம், கோம்பை, தேவாரம், உத்தமபாளையம், கம்பம், கூடலூர், சின்னமனூர், எரசக்கநாயக்கனூர், மேகமலை, ஹைவேவிஸ், தென்பழனி ஆகிய பகுதிகளிலும், ஆண்டிப்பட்டி தாலுகாவுக்கு உட்பட்ட ஏராளமான மலையடிவார கிராமங்களிலும் வன விலங்குகளால் பயிர் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
குரங்குகள், காட்டெருமைகள், காட்டுப்பன்றிகள், யானைகள் போன்றவற்றால் பாதிப்புகள் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. அதில், காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பாதிப்புகள் கணக்கில்லாதவை. அன்றாடம் பல்வேறு இடங்களில் காட்டுப்பன்றிகள் விளை பயிர்களை நாசம் செய்து வருகின்றன.
மிகுந்த அச்சுறுத்தல்
மலைப்பகுதி மற்றும் மலையடிவார பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் கரும்பு, வாழை, தென்னை மற்றும் இதர பயிர் சாகுபடிக்கும் காட்டுப்பன்றிகள் மிகுந்த அச்சுறுத்தலாக உள்ளன. மலையடிவார தோட்டங்களில் பணியாற்றும் விவசாயிகள், விவசாய தொழிலாளர்களும் காட்டுப்பன்றிகளால் அச்சத்துடன் அன்றாடம் பொழுதை கடக்கின்றனர். மலையடிவாரத்தில் இருந்து பல கிலோமீட்டர் தூரம் படையெடுத்தும் விளை பயிர்களை காட்டுப்பன்றிகள் வேட்டையாடுகின்றன.
கூட்டம், கூட்டமாக வரும் காட்டுப்பன்றிகளால் விளை பயிர்களும், விளை நிலங்களும் பாழகின்றன. பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நிவாரணமும் கிடைப்பது இல்லை. கணக்கில் அடங்காமல் காட்டுப்பன்றிகள் பெருகியதே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
வன விலங்குகள் பட்டியல்
தேனி மட்டுமின்றி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் காட்டுப்பன்றிகளால் விவசாயிகள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். ஏற்கனவே விளைவித்த பொருட்களுக்கு போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதில், காட்டுப்பன்றிகளும் விவசாயிகள் வாழ்வாதாரத்தை நசுக்குகின்றன.
காட்டுப்பன்றிகள் வன விலங்குகள் பட்டியலில் இருப்பதால் அவற்றை கட்டுப்படுத்தவும் முடியாத சூழல் உள்ளது. எனவே, அவற்றின் பாதிப்பில் இருந்து விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாக்க காட்டுப்பன்றிகளை வன விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்பது விவசாயிகள் பல ஆண்டுகளாக முன்வைக்கும் கோரிக்கையாக உள்ளது. தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் நடக்கும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தின் போதும் இந்த கோரிக்கை முன் வைக்கப்படுகிறது.
கேரளாவில் நீக்கம்
அண்டை மாநிலமான கேரளாவில் காட்டுப்பன்றிகளால் பாதிப்புகள் அதிகரித்து வந்ததாலும், காட்டுப்பன்றிகள் எண்ணிக்கை கட்டுக்குள் அடங்காமல் பெருகிவிட்டதாலும் அவற்றை வன விலங்குகள் பட்டியலில் இருந்து கேரள மாநில அரசு நீக்கி விட்டது. கேரளாவில் நீக்கியது போல் தமிழ்நாட்டிலும் வனவிலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுப்பன்றிகளை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை விவசாயிகள் முன்வைத்து வருகின்றனர்.
இதுதொடர்பாக தேனி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கூறிய கருத்துகள் வருமாறு:-
கூடலூரை சேர்ந்த விவசாயி வெங்கட் கூறும்போது, "கூடலூர் பகுதியில் நிலக்கடலை சாகுபடி அதிக அளவில் நடக்கிறது. காட்டுப்பன்றிகளால் நிலக்கடலை சாகுபடி மற்றும் இதர பயிர் சாகுபடி அதிக அளவில் பாதிக்கப்படுகிறது. இரவு காவலுக்கு சென்றாலும் அச்சத்துடன் இருக்க வேண்டிய நிலை உள்ளது. பன்றிகள் ஏற்படுத்தும் பாதிப்புக்கு இழப்பீடும் கிடைப்பது இல்லை. இந்த காட்டுப்பன்றிகளை வன விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்து, அவற்றின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும்" என்றார்.
பொருளாதார இழப்பு
லட்சுமிபுரத்தை சேர்ந்த விவசாயி ஆதிநாராயணன் கூறும்போது, "பெரியகுளம் அருகே கைலாசப்பட்டி மலையடிவாரத்தில் விவசாயம் செய்து வருகிறேன். எனது தோட்டத்தில் சமீபத்தில் வாழை, கரும்பு பயிர்களை காட்டுப்பன்றிகள் நாசம் செய்து விட்டன. தென்னை சாகுபடி செய்த போதும், தென்னங்கன்றுகளையும் அவை நாசம் செய்துவிட்டன. இதனால், விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. தொடர்ந்து விவசாயம் செய்தாலும் மீண்டும் பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே, பன்றிகள் தொல்லையால் பாதிப்பு ஒருபுறம் என்றால், ஏதாவது ஒரு காட்டுப்பன்றி உடல் நலம் பாதிக்கப்பட்டு விவசாய நிலத்தில் இறந்து கிடந்தாலும் விவசாயிகளுக்கு வனத்துறையினர் அபராதம் விதிக்கும் சூழலும் உள்ளது. கேரளாவை போன்று தமிழ்நாட்டிலும் பன்றிகளை வன விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும்" என்றார்.
பொன்னன்படுகையை சேர்ந்த விவசாயி பாரதிராஜா கூறும்போது, "வன விலங்குகள் அட்டகாசத்தால் விவசாயிகளுக்கு பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே ஆண்டிப்பட்டி தாலுகா வறட்சியான பகுதி. காட்டுப்பன்றிகளால் மக்காச்சோளம், தென்னை, மா, வாழை என அனைத்து விதமான பயிர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. அறுவடை நேரத்தில் கூட்டமாக வரும் காட்டுப்பன்றிகள் பயிர்களை துவம்சம் செய்வதால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுகிறது. வன விலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுப் பன்றிகளை நீக்கிவிட்டு, விளை பயிர்களுக்கும், விவசாயிகளின் உயிருக்கும் பாதிப்பு ஏற்படும் சூழலில் அவற்றை கட்டுப்படுத்த வனத்துறையினர் முன்வர வேண்டும்" என்றார்.
அரசு உத்தரவிட வேண்டும்
கம்பத்தை சேர்ந்த விவசாயி மொக்கராசு கூறும்போது, "கம்பம் மலையடிவார பகுதிகளில் காட்டுப் பன்றிகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விவசாயிகளின் நிலத்தில் ஒரு காட்டுப்பன்றி இறந்து கிடந்தால் வனத்துறையினர் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கும் நடைமுறை உள்ளது. தற்போது இந்த அபராத தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அண்டை மாநிலமான கேரளாவில் காட்டுப்பன்றிகளை வன விலங்கு பட்டியலில் இருந்து நீக்கி விட்டனர். ஆனால், தமிழகத்தில் நீக்காமல் உள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு அதனை வன விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய அரசு உத்தரவிட வேண்டும். காட்டுப்பன்றிகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கும், விளை பயிர்களுக்கும் உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும். இதே நிலை நீடித்தால் மலையடிவார பகுதிகளில் விவசாயம் செய்யவே முடியாது" என்றார்.
மாநில அரசு முடிவு எடுக்கலாம்
இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகள் சிலரிடம் கேட்டபோது, "உயிரினங்கள், அரிய தாவரங்கள் ஆகியவற்றை பாதுகாக்கும் நோக்கத்தோடு வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், அவை 6 வகையாக பட்டியலிடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதில், முதல் 2 வகையில் உள்ளவற்றில் மாற்றங்கள் செய்வது என்றால் மத்திய அரசின் அனுமதி தேவை. ஆனால், மற்ற வகை பட்டியலில் மாற்றம் செய்ய மாநில அரசே முடிவு செய்யலாம். காட்டுப்பன்றி தற்போது 4-ம் வகை பட்டியலில் உள்ளது. கேரள மாநில அரசு எடுத்த முடிவால் காட்டுப்பன்றிகள் அந்த மாநிலத்தில் உள்ள வன விலங்குகள் பட்டியலில் நீக்கம் செய்யப்பட்டன. தற்போது காகம், சுண்டெலி, பழம் தின்னும் வவ்வால் போன்றவை இத்தகைய பட்டியலில் இடம்பெறவில்லை. அதனால், அவற்றை சுட்டால் தண்டனை கிடையாது. அதே நேரத்தில் வகைப்படுத்தப்பட்டு பட்டியலிடப்பட்ட உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும்பட்சத்தில் அதற்கு காரணமானவர்கள் மீது அபராதம், சிறை தண்டனை விதிக்கப்படும். தற்போது இதற்கான அபராத தொகை உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பன்றிகள் தொல்லைகளால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க சில வழிமுறைகள் உள்ளன. அவற்றை விவசாயிகள் பின்பற்ற வேண்டும்" என்றனர்.