பெரம்பலூர்
திருவிழா, பண்டிகை காலங்களில் வன விலங்குகளை வேட்டையாடக்கூடாது
|திருவிழா, பண்டிகை காலங்களில் வன விலங்குகளை வேட்டையாடக்கூடாது என்று அதிகாரி அறிவுறுத்தினார்.
விழிப்புணர்வு பிரசார வாகனம்
பெரம்பலூர் மாவட்டத்தில், வனத்துறை சார்பில் காப்புக்காடுகளை ஒட்டியுள்ள கிராமங்களில் தீத்தடுப்பு குறித்தும், வன விலங்குகளை வேட்டையாடுவது குற்றம் என்பது குறித்தும், இலவச மரக்கன்றுகள் வழங்கப்படுவது குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பிரசார வாகனம் தொடக்க நிகழ்ச்சி, பெரம்பலூரில் உள்ள மாவட்ட வன அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த வாகனத்தை மாவட்ட வன அலுவலர் குகனேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் திருச்சி வன பாதுகாப்பு படையின் உதவி பாதுகாவலர் நாகைய்யா, பெரம்பலூர் வன சரகர் பழனிகுமரன், வனவர் குமார், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இலவச மரக்கன்றுகள்
பின்னர் வன அலுவலா் குகனேஷ் கூறியதாவது:-
வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972-ன் படி முயல், மான், மயில், காட்டுப்பன்றி போன்ற அனைத்து வன விலங்குகளையும் வேட்டையாடுவது குற்றமாகும். இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவது, அந்த சட்ட பிரிவு 9 மற்றும் 51-ன் படி தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே திருவிழா, பண்டிகை போன்ற காலங்களில் வன விலங்குகளை வேட்டையாடக்கூடாது.
காப்பு காடுகளில் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து விட்டு, வனக்காப்பாளர்கள், வனக்காவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும். மேலும் தமிழ்நாடு வனத்துறையின் சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தில் நபார்டு 2022-23-ம் நிதி ஆண்டு திட்டத்தில் விவசாயிகளுக்கு தேக்கு, செம்மரம், சவுக்கு, புங்கன், மகாகனி, வேம்பு ஆகிய மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. நீர்ப்பாசன வசதி, பாதுகாப்பு வேலி வைத்துள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மரக்கன்றுகள் தேவைப்படுவோர் 6369255435, 8508672306, 9655476094, 7825918555 என்ற செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.