கள்ளக்குறிச்சி
மதுவில் விஷம் கலந்து கொடுத்துகணவரை கொன்ற மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனைகள்ளக்குறிச்சி கோர்ட்டில் பரபரப்பு தீர்ப்பு
|கள்ளக்குறிச்சி அருகே மதுவில் விஷம் கலந்து கொடுத்து கணவரை கொலை செய்த மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கள்ளக்குறிச்சி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
சாவில் சந்தேகம்
கள்ளக்குறிச்சி அருகே வீ.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் மகன் சுப்பிரமணி(வயது 45), விவசாயி. இவருடைய மனைவி செல்வி(37). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
வீட்டில் இருந்த சுப்பிரமணிக்கு கடந்த 16.4.2021 அன்று திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, மறுநாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய சாவில் சந்தேகம் உள்ளதாக உறவினர் இந்திரா என்பவர் தியாகதுருகம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் செல்வி மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.
கொலை செய்ய திட்டம்
விசாரணையில் செல்விக்கும், அதேஊரை சேர்ந்த ஜெயராமன் மகன் ஜெயமுருகன்(45) என்பவருக்கும் 2 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதையறிந்த சுப்பிரமணி, செல்வியை கண்டித்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த சுப்பிரமணியை, செல்வி தனது கள்ளக்காதலன் ஜெயமுருகனும் சேர்ந்து கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.
அந்த திட்டப்படி கடந்த 16.4.2021 அன்று நள்ளிரவு 1.30 மணியளவில் சுப்பிரமணி ஏற்கனவே வீட்டில் வாங்கி வைத்திருந்த மதுபாட்டிலில் ஜெயமுருகன் வாங்கி கொடுத்த பூச்சிக் கொல்லி மருந்தை செல்வி கலந்து வைத்துள்ளார். விஷம் கலந்திருப்பதை அறியாத சுப்பிரமணி மதுவை குடித்து இறந்து போனதும் தெரியவந்தது.
2 பேருக்கு ஆயுள் தண்டனை
இதுகுறித்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து செல்வி, ஜெயமுருகன் ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு கள்ளக்குறிச்சி 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் இறுதி விசாரணைகள் முடிந்து இந்த வழக்கில் நேற்று பரபரப்பு தீர்ப்பு கூறப்பட்டது. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை மதுவில் விஷத்தை கலந்து கொலை செய்த மனைவி செல்வி மற்றும் அவருடைய கள்ளக்காதலன் ஜெயமுருகன் ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 31 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி கீதா தீர்ப்பு கூறினார்.