< Back
மாநில செய்திகள்
கத்தரிக்கோலால் மனைவி குத்திக்கொலை
திண்டுக்கல்
மாநில செய்திகள்

கத்தரிக்கோலால் மனைவி குத்திக்கொலை

தினத்தந்தி
|
22 July 2022 5:26 PM GMT

வடமதுரை அருகே மது அருந்தியதை கண்டித்ததால் ஆத்திரத்தில் கத்தரிக்கோலால் மனைவியை குத்திக்கொலை செய்த டெய்லர் கைது செய்யப்பட்டார்.

டெய்லர்

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை லக்கன் தெருவை சேர்ந்தவர் கருப்பையா (வயது 39). டெய்லர். இவர் அதே பகுதியில் டெய்லர் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கற்பகம் (30). இவர்களுக்கு சுஜிதா (13), இனியதர்ஷினி (9), வர்ஷினி (7) ஆகிய 3 மகள்கள் உள்ளனர்.

கருப்பையாவுக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதை கற்பகம் கண்டித்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் கருப்பையா மது அருந்துவதை நிறுத்த வேண்டும் என்பதற்காக நேற்று காலையில் ஈரோட்டில் உள்ள ஆண்டாள் கோவிலுக்கு கற்பகம், அவரை அழைத்து சென்று மந்திரித்து கயிறு கட்டினார்.

கத்தரிக்கோலால் குத்திக்கொலை

இந்த நிலையில் இரவு வீட்டுக்கு வந்த கருப்பையா மீண்டும் மது அருந்தினார். இதனை கற்பகம் கண்டித்தார். அப்போது என்னை மது அருந்தக்கூடாது என்று சொல்வதற்கு நீ யார் என கேட்டு, கற்பகத்திடம் அவர் தகராறு செய்தார். இதில் கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கருப்பையா வீட்டில் இருந்த கத்தரிக்கோலை எடுத்து கற்பகத்தின் கழுத்தில் குத்தினார்.

இதில் படுகாயமடைந்த கற்பகம் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கற்பகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

கைது

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கருப்பையாவை கைது செய்தனர். மது அருந்தியதை கண்டித்த மனைவியை கணவன் கத்தரிக்கோலால் குத்திக்கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்