தேனி
ஆண்டிப்பட்டி அருகே கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவி மரணம்; சாவிலும் இணைபிரியாத தம்பதி
|ஆண்டிப்பட்டி அருகே கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவி மரணம் அடைந்தார்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள பாலக்கோம்பையை சேர்ந்தவர் பெத்தையன் (வயது 74). இவர் சிங்கராஜபுரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஆவார். இவரது மனைவி கருப்பாயம்மாள். இவர், பாலக்கோம்பை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவராக இருந்தவர். இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை கருப்பாயம்மாள் நடந்து சென்றபோது, நிலை தடுமாறி கீழே விழுந்ததில் காயமடைந்தார். இதையடுத்து அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையே அன்றைய தினம் மாலை பெத்தையன் வயது முதிர்வால் திடீரென்று இறந்தார். இதுகுறித்து உறவினர்கள், கருப்பாயம்மாளிடம் தெரிவித்தனர். கணவர் இறந்ததை கேட்டதும் அதிர்ச்சியடைந்த கருப்பாயம்மாளும் மரணம் அடைந்தார். பின்னர் பெத்தையன், கருப்பாயம்மாள் ஆகியோரின் உடல்கள் பாலக்கோம்பை மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
ஒரேநாளில் அடுத்தடுத்து வயதான தம்பதி இறந்த சம்பவம் பாலக்கோம்பை கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.