கருத்து வேறுபாடால் மனைவி தற்கொலை... அடுத்த நாளே கணவர் எடுத்த விபரீத முடிவு
|அருண்குமாருக்கும் தேன்மொழி என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
வாணியம்பாடி,
திருப்பத்தூர் மாவட்டம் உதயேந்திரம் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 40). சென்னை கே.கே.நகரில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கும், பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை தேன்மொழி (31) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு அருண்குமார் தனது மனைவி தேன்மொழியை அவரது தாய் வீட்டில் விட்டுவிட்டு சென்னைக்கு வந்து விட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தேன்மொழி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து பெண்ணின் உறவினர்கள் தேன்மொழியின் இறப்புக்கு காரணமான அவரது கணவர் அருண்குமார் உள்பட அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாணியம்பாடி தாலுகா போலீசில் புகார் அளித்தனர். போலீசார் புகாரை வாங்க மறுத்ததால் உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அதை தொடர்ந்து போலீசார் புகாரை பெற்றுக்கொண்டனர்.
இந்த நிலையில் அவர்களை கைது செய்யும் வரையில் தேன்மொழியின் உடலை வாங்க மாட்டோம் என போலீசாரிடமும், வருவாய் கோட்டாட்சியர், தாசில்தார் ஆகியோரிடம் கூறி நேற்று காலை வரையில் பிணத்தை வாங்காமல் இருந்தனர். இதற்கிடையே மனைவி இறந்த தகவலை அறிந்த அருண்குமார், போலீசார் தன்னை தேடுவதை குறித்து தெரிய வந்ததால் சென்னையில் தான் தங்கி இருந்த வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கே.கே.நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மனைவி இறந்த அடுத்த நாளே கணவனும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.