கரூர்
குடும்பத்தகராறில் கணவரை கத்திரிக்கோலால் தாக்கிய மனைவி
|தரகம்பட்டி அருகே குடும்பத்தகராறில் கணவரை கத்திரிக்கோலால் மனைவி தாக்கினார்.
கரூர் மாவட்டம், தரகம்பட்டி அருகே உள்ள கடவூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் கருத்தரியன் (வயது 40). இவரது மனைவி உமாபதி. இந்த தம்பதிக்கு இடையே கடந்த ஓராண்டாக குடும்ப பிரச்சினை இருந்துள்ளது. அதேபோல் சம்பவத்தன்றும் கணவன், மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்து கொண்டு உமாபதி அதே ஊரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதனால் மனைவியை அழைத்து வருவதற்காக கருத்தரியன் மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போதும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த உமாபதி அங்கிருந்த கத்திரிக்கோலை எடுத்து கருத்தரியனின் தேள்பட்டை மற்றும் கைகளில் குத்தியுள்ளார்.
தீவிர சிகிச்சை
இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கருத்தரியன் கொடுத்த புகாரின்பேரில், பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.